சுப்ரீம் கோர்ட் உத்தரவை எதிர்த்து கடையடைப்பு போராட்டம். எல்லையில் பதட்டம்
தமிழகத்திற்கு காவிரியில் இருந்து 50 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கில் நடப்பு பாசன ஆண்டில் 50.052 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாயிகள் இன்று மாண்டியா பகுதியில் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் இன்று காலை முதல் தமிழக, கர்நாடக எல்லையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதோடு, இரு மாநிலங்களில் இருந்து விநாயகர் சதூர்த்தி விடுமுறைக்கு வீட்டுக்கு சென்ற பொதுமக்கள் மீண்டும் அலுவலகம் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
ஓசூர், சத்தியமங்கலம், சேலம் பகுதியில் கர்நாடகத்திற்கு செல்ல வேண்டிய தமிழக பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே “அனைத்துக்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகே காவிரியில் நீர் திறந்து விடுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அதுவரை கர்நாடக மக்களும், விவசாயிகளும் அமைதி காக்க வேண்டும்” என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா கேட்டுக்கொண்டுள்ளார்.