சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் செல்வார்கள். இவர்கள் தமிழ் மாதமான கார்த்திகை முதல் நாள் மாலை அணிந்து விரதம் தொடங்குவார்கள். அதன்படி நேற்று மாநிலம் முழுவதும் உள்ள அய்யப்ப பக்தர்கள் அவர்களின் ஊரில் உள்ள கோவில்களில் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நாகராஜா கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவில், திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோவில், தோவாளை முருகன் கோவில் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள கோவில்களில் நேற்றுமாலை அணியும் நிகழ்ச்சி நடந்தது.
ஏராளமான பக்தர்கள் அதிகாலையிலேயே எழுந்து நீராடி கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டு விரதம் தொடங்கினர். கோவில்களில் மாலை அணியும் முன்பு அவர்கள் சரணகோஷம் எழுப்பினர். கன்னியாகுமரியிலும் ஏராளமான உள்ளூர், மற்றும் வெளியூர் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர். இனி மாவட்டம் எங்கும் கோவில்களில் அய்யப்பனின் சரண கோஷத்தை கேட்கலாம். இன்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள கோவில்களில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து வருகின்றனர்.