ஜெயலலிதாவை விமர்சிக்கும்போது கூச்சல் போட்ட தொண்டர்கள். கருணாநிதி எரிச்சல்
தமிழக சட்டமன்றத்திற்கு வரும் மே மாதம் 16ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி, சென்னை, கடலூர் பொதுக்கூட்டத்தில் பேசிய பின்னர் நேற்று இரவு மயிலாடுதுறையில் நடைபெற்ற பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் பேசினார்.
இந்த கூட்டத்தில் பேசிய கருணாநிதி, “தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையில் காட்டாட்சி நடைபெறுகிறது. திராவிட இயக்கம் சமுதாய இயக்கம். இளைஞ்ர்கள் சமுதாய பணி ஆற்றிட முன் வர வேண்டும். இளைஞர்கள் தான் இந்த நாட்டை காப்பாற்ற முடியும். மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பது தான் தேர்தல் அறிக்கை, நீங்கள் என்ன வேண்டும் என கோரிக்கை விடுத்தீர்களோ அவை நிறைவேற்றப்படும். மது விலக்கு பிரச்னை பெரும் பிரச்னையாக உள்ளது. அதனை நீக்கும் வகையில் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் அதுவே முதல் கையெழுத்தாக இரு்க்கும்’ என்று அவர் பேசிக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்து கருணாநிதி பேசிக் கொண்டிருக்கும்போது கூட்டத்திற்கு வந்திருந்த தொண்டர்களில் சிலர் திடீரென கூச்சலிட்டனர். இதனால் கருணாநிதி எரிச்சல் அடைந்தார். சிறிது நேரம் தனது பேச்சை நிறுத்திய கருணாநிதி, கூச்சலிடும் தொண்டர்கள் கூட்டத்திலிருந்து வெளியேறாவிட்டால் வெளியேற்றப்படுவார்கள் என்று எச்சரிக்கை செய்தார். தனது கூட்டத்திற்கு வந்திருந்த தொண்டர்களையே வெளியேற்றுவேன் என்று கருணாநிதி பேசியது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.