ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து போராட்டம் நடத்துவது ஜனநாயகத்திற்கு விரோதமானது என திமுகதலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்,:
சென்னை மாநகரில் பொதுப் பிரச்னைகளுக்காகவோ, இலங்கைப் பிரச்னை, மீனவர் பிரச்னை போன்றவைகளுக்காகவோ எதிர்க்கட்சிகள் ஏதாவது ஒரு போராட்டம் நடத்த முன்வந்து, அதற்காகக் காவல் துறையினரிடம் அனுமதி கேட்டால், அந்தப் போராட்டங்களை சென்னை மாநகரில் இரண்டே இரண்டு இடங்களில் மட்டுமே அதாவது வள்ளுவர்கோட்டம், மற்றொன்று சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில்தான் உண்ணாவிரதங்களையோ, போராட்டங்களையோ, ஆர்ப்பாட்டங்களையோ நடத்த அனுமதி வழங்குவார்கள்.
இது அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் பொருந்தும். ஆனால், கடந்த ஒரு வார காலமாக இந்த விதி ஆளுங்கட்சி சார்பில் நடத்துகின்ற போராட்டங்களுக்கு கடைப்பிடிக்கப்படுகிறதா? ஆளுநர் வீட்டு வாசலிலும், ஏன் ஜெயலலிதா வீட்டு வாசலில், பிரதான சாலையில், பெண்கள் கல்லூரிக்கு அருகில், போக்குவரத்து அதிகமாக உள்ள இடத்தில் ஆளுங்கட்சியினர் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
வேலூர் நகராட்சி மன்றத்தில் நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். சென்னை மாநகராட்சி மன்ற மேயரே மாநகராட்சி மன்றத்தில் தீர்ப்பைக் கடுமையாக விமர்சித்தும் என்னைத் தாக்கியும் பேசுகிறார். அதைப்பற்றிக் கேள்வி கேட்ட தி.மு.க. உறுப்பினர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் என்ன வகை ஜனநாயகமோ?.