முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து இந்தியாவிலும் தமிழகத்திலும் உள்ள பல தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தபோதும் தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான திமுக கட்சியின் தலைவர் கருணாநிதியும் அவரது கட்சியினர்களும் எவ்வித கருத்தையும் இதுவரை தெரிவிக்காமல் இருந்தனர்.
இந்நிலையில் தனக்குத்தானே கேள்வி கேட்டு பதில் எழுதும் பழக்கம் உடைய கருணாநிதி இன்று முதல்முறையாக தீர்ப்பு மகத்தானது என கருத்து தெரிவித்துள்ளார். இந்த கருத்தையும் அவர் நேரடியாக கூறாமல் தீர்ப்பு மகத்தானது என ஒரு பத்திரிகை தலையங்கம் எழுதியுள்ளது என்று கூறி கழுவுற மீனில் நழுவுற மீனாக பதில் அளித்துள்ளார். மேலும் அதிமுக கட்சியை தடை செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளதாகவும், அது ஒரு சிந்தித்து பார்க்கவேண்டிய கருத்து என்றும் அவர் கூறியுள்ளார்.
அவர் விடுத்துள்ள கேள்வி – பதில் வடிவிலான அறிக்கை வருமாறு:
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்பாக தாங்கள் எதுவுமே கூறவில்லையே?
இது நிச்சயம் மகத்தான தீர்ப்பு. நீதி நிலை நிறுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று ஒரு பத்திரிகை தலையங்கம் எழுதியுள்ளது.
முக்கியமான வழக்குகளை மாநிலம் விட்டு வேறு மாநில நீதிமன்றங்களுக்கு மாற்றிய சம்பவம் உண்டா?
உச்சநீதிமன்றம் பல வழக்குகளை வேறு மாநில நீதிமன்றங்களுக்கு மாற்றிய சம்பவங்கள் உண்டு. நான் முதலமைச்சராக இருந்தபோதே என் மகன் மு.க.அழகிரி மீதான வழக்கை மராட்டிய மாநிலத்துக்கு உச்சநீதிமன்றம் மாற்றியது.
தீர்ப்பைத் தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறையால் ஏற்பட்டுள்ள இழப்பீடுகளுக்கான தொகையை அதிமுகவிடம் இருந்து பெற வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளாரே..?
உண்மையில் சிந்தித்துப் பார்க்க வேண்டிய கருத்துதான் இது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் வன்முறை செயல்களில் ஈடுபட்ட அதிமுகவைத் தடை செய்யவும் தயங்கக் கூடாது என்று தமிழக ஆளுநருக்கு ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த ஆண்டு மே 13-ஆம் தேதி தமிழகச் சட்டப்பேரவையில் பேசிய ஜெயலலிதா, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் எந்தக் கட்சி ஈடுபட்டாலும், அந்தக் கட்சியைத் தடை செய்ய அரசு தயங்காது என்று கூறியிருந்தார்.அதனை நினைவுபடுத்திதான் ராமதாஸ் தற்போது கூறியுள்ளார்.
இவ்வாறு அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.