பகவத் கீதை தேசிய புனித நூலா? சுஷ்மா ஸ்வராஜுக்கு கருணாநிதி கண்டனம்

karuna and sushmaநேற்று பகவத் கீதை குறித்த விழா ஒன்றில் கலந்து கொண்ட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ‘பகவத் கீதையை தேசிய புனித நூலாக விரைவில் மத்திய அரசு அறிவிக்கும்’ என்றார். இதற்கு பல வடநாட்டு தலைவர்கள் வரவேற்பு அளித்துள்ள நிலையில் தமிழகத்தில் திமுக தலைவர் கருணாநிதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,  மத்திய அரசில் பா.ஜ.க. பொறுப்பேற்றதற்குப் பிறகு, சமூக வலைத் தளங்களில் கட்டாயம் “இந்தி” என்று தொடங்கி, “குரு உத்சவ்” என்று விழா எடுத்து, பாடமொழியாக “சமஸ்கிருதம்” என்று அறிவித்து, மத்திய அமைச்சர் ஒருவரே அவசரப்பட்டு சர்ச்சைக்குரிய கருத்தினைத் தெரிவித்து, அதற்காக பிரதமரே வருத்தம் கலந்த தொனியில் சமாதானம் செய்து பதில் கூறுகின்ற அளவுக்கு நிலைமை மாறி, இப்போது அடுத்த கட்டமாக “பகவத் கீதை” தேசியப் புனித நூலாக அறிவிக்கப்படுவதாக உள்ளது என்றும், அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடந்து வருவதாகவும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சர்ச்சைக்குரிய கருத்தினைத் தெரிவித்து, மீண்டும் ஒரு “வம்பை” விலை கொடுத்து வாங்கியிருக்கிறார்.

இந்தியா ஒரு மதச் சார்பற்ற குடியரசு நாடு என்று தான் நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையிலேயே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அதாவது இந்தியாவில் “இந்து” மதம், “இஸ்லாமிய” மதம், “கிறித்தவ” மதம் “சீக்கிய” மதம், “ஜைன” மதம் போன்ற பல்வேறு மதங்கள் இருந்தாலும், அனைத்து மதங்களையும் சமமாகப் பாவித்து மதச் சார்பற்ற தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் அடிப்படை கோட்பாடாக இருந்திட வேண்டும். பல்வேறு மொழிகள், கலாச்சார பாரம்பரியங்கள், இனவேறுபாடுகள் இந்தியாவில் இருப்பதால்தான் இது பன்முகம் கொண்டு பரந்து விரிந்த நாடு; இங்கு சமத்துவமும், சமதர்மமும் போற்றப்பட வேண்டும் என்பது தான் அடிப்படைக் கொள்கையாக அமைந்திட வேண்டும்.

ஜனநாயகத்தில் அரசியலமைப்புச் சட்டம் தான் புனித நூலாகும் என்று மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தனது கண்டனத்தை வெளியுறவுத் துறை அமைச்சரின் கருத்துக்கு எதிராகத் தெரிவித்திருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் சார்பிலும், சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளது “அர்த்தமற்ற” கருத்து என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க. அரசு பல்வேறு வகையில் மக்கள் நலம் பேணும் செயல்களில் ஈடுபட்டாலும் இது போன்ற தேவையற்ற செயல்களில் அவ்வப்போது ஈடுபடுவதன் மூலம் அதன் பெயரைக் கெடுத்துக் கொள்கிறதோ என்றும், பா.ஜ.க. அரசு முன்னோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால், பின்னோக்கி இரண்டு அடிகள் வைக்கிறதோ என்று நடுநிலையாளர்கள் எண்ணுகின்ற முறையில் தான் நடைபெறுகிறது என்றும் எண்ண வேண்டியிருப்பதால்; பிரதமர் நரேந்திர மோடி  சர்ச்சைக்குரிய இப்படிப்பட்ட கருத்துகளை ஒவ்வொருவரும் எழுப்பி மக்களிடையே கிளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் நடந்து வளர்ச்சிப் பணிக்குக் குந்தகம் ஏற்படுத்தாதவாறு மிகுந்த எச்சரிக்கையோடு மத்திய அரசை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென்று வலியுறுத்துவோடு, தேசியப் புனித நூலாக பகவத் கீதை அறிவிக்கப்படும் என்ற வெளியுறவுத் துறை அமைச்சரின் பேச்சுக்கு திமுகவின் கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Leave a Reply