முதலமைச்சர் அறை என்று தனது அறையிலே “போர்டு” மாட்டிக் கொள்ளக்கூட துணிச்சல் இல்லாத பன்னீர்செல்வம், எனது அறிக்கைகளுக்கு பதில் அறிக்கைகள் அனுப்பி அரசியல் பிழைப்பு நடத்துகிறார் என திமுக தலைவர் கருணாநிதி காட்டமாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில், “இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவது தொடர்பாக மத்திய அரசு ஏற்பாடு செய்த பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்கான அழைப்புக் கடிதத்திற்கு தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் எழுதிய பதிலில் அகதிகள் இலங்கைக்குத் திரும்புவதற்கான சூழ்நிலை இன்னமும் ஏற்படவில்லை என்பதால் அந்தக் கூட்டத்தைத் தள்ளி வைக்க வேண்டுமென்று தெரிவித்திருந்தார்.
அது பற்றித் தான் நான் விடுத்த அறிக்கையில், “மத்திய அரசு முக்கியமானதொரு கூட்டத்தை கூட்டியுள்ள போது, அந்தக் கூட்டத்திலே கலந்து கொண்டு தமிழ் அகதிகளை நல்ல முறையில் வாழ வைக்க வேண்டும், அதற்கான உறுதியைத் தர வேண்டுமென்ற செய்தியை அங்கே தெரிவிக்க வேண்டியது தமிழக அரசின் கடமை அல்லவா?” என்றெல்லாம் நான் கேட்டிருந்தேன்.
இதற்குத் தான் நான்கு நாட்கள் பொறுத்திருந்து பன்னீர்செல்வம் விடுத்துள்ள பதிலில் “இலங்கை அகதிகளை திருப்பி அனுப்பத் துடிக்கிறார் கருணாநிதி” என்று அப்பட்டமான பொய்யைச் சொல்லியிருக்கிறார்.
முதலமைச்சர் அறை என்று தனது அறையிலே “போர்டு” மாட்டிக் கொள்ளக்கூட துணிச்சல் இல்லாமல், முதலமைச்சரே இல்லாத மாநிலம் தமிழகம் எனும் அவப் பெயரை உருவாக்கி வரும் பன்னீர்செல்வத்துக்கு எனக்குப் பதில் சொல்லி அறிக்கை விடவும், மத்திய அரசுக்குக் கடிதம் எழுதவும் மட்டும் தான் அனுமதி உண்டு போலும்!
என்னைத் தாக்கி அறிக்கை விட்டால்தான் அம்மையார் மனம் குளிரும், தன்னுடைய பதவி நிலையைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பதற்காக அவர் அறிக்கை விடுவாரானால், அவருடைய ஆசை நிறைவேறிப் பிழைத்துப் போகட்டும்! நான் அதைத் தடுக்க விரும்பவில்லை.
ஆனால் பதில் அறிக்கை என்ற பெயரால் இல்லாததையும், பொல்லாததையும் எழுத்தாக்கி, அரசியல் பிழைப்பு நடத்த முயன்றால் வாங்கிக் கட்டிக் கொள்ளத்தான் வேண்டும். ஈழத் தமிழர்கள் பால் உள்ள காழ்ப்புணர்ச்சி எனக்கு இன்னமும் தணியவில்லை என்று பன்னீர்செல்வம் அறிக்கை விடுகிறார்!
இலங்கைத் தமிழர்கள்பால் எனக்கா காழ்ப்புணர்ச்சி? இவரும், இவரது “அம்மா”வும் பிறப்பதற்கு முன்பே 1956-ல் பேரறிஞர் அண்ணா அவர்களின் முன்னிலையிலேயே சிதம்பரம் தி.மு.கழகப் பொதுக் குழுவில் இலங்கைத் தமிழர்களுக்காகத் தீர்மானத்தை முன்மொழிந்தவன் நான்!
தமிழ் அகதிகள் இலங்கை திரும்புவதற்கான சுமூகமான நிலை ஏற்பட வில்லை என்பது தான் மக்களின் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா வழி நடக்கும் அ.தி.மு.க. அரசின் கருத்தாகும் என்றும், இலங்கை அகதிகள் உண்மையில் அங்கே செல்ல விரும்பவில்லை என்றும், ஆனால் அவர்களை நான் இலங்கைக்கு அனுப்பத் துடிப்பதாகவும் பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.
இதற்கு நான் பதில் அளிப்பதற்கு முன்பாக, ஈழத் தந்தை என அழைக்கப்படும் செல்வாவின் மகனும், ஈழ அகதிகள் மறுவாழ்வுக்கான அமைப்பின் பொருளாளருமான நண்பர் சந்திரஹாசன் கூறியிருப்பதாவது, “விருந்தாளியாக எத்தனை நாட்களுக்கு தமிழகத்தில் இருக்க முடியும்? ஓட்டுரிமை, நிரந்தர குடியுரிமை என்பது இலங்கையில் தான் கிடைக்கும். அதனால், பெருவாரியான ஈழத் தமிழர்கள், நாடு திரும்பவே விரும்புகின்றனர். இறுதிக் கட்டப் போர் முடிந்த பின், 2009 முதல் 2014 வரை இரண்டாயிரம் பேர், அவர்களே விரும்பி இலங்கை திரும்பியுள்ளனர். அவர்களில் பெரும் பகுதியினர் அங்கு தான் இருக்கின்றனர். சிலர், மீண்டும் இங்கு வந்து விட்டனர். அங்கிருப்பவர்கள் “ஸ்கைப்” என்ற இணைய தள வசதி மூலம் இங்குள்ளவர்களிடம் பேசுகின்றனர். அங்கு உயிருக்கு அச்சமில்லை என்பது தெரிய வந்திருக்கிறது. அகதிகள் நாடு திரும்புவதில் தமிழக அரசியலைப் புகுத்தாமல், விரும்பி நாடு திரும்புவோரை உரிய முறையில் மகிழ்ச்சியுடன் அனுப்ப வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும் இந்தியாவில் உள்ள பல்வேறு தொண்டு நிறுவனங்கள் நடத்திய ஆய்வில், தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளில் 70 சதவிகிதம் பேர், நாடு திரும்ப விரும்புவதாகவும், 20 சதவிகிதம் பேர் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, நாடு திரும்ப விரும்புவதாகவும், 10 சதவிகிதம் பேரே, தமிழகத்தில் தொடர்ந்து வாழ விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர் என்று ஒரு நாளேடு எழுதியுள்ளது.
உண்மையில் நான் எனது அறிக்கையில், “இலங்கை அகதிகளும், இலங்கையிலே முன்னாள் அதிபர் ராஜபக்ச அரசின் கொடுமையினால் புலம் பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களும், மீண்டும் தாயகம் திரும்பி, நிம்மதியாக வாழவேண்டுமென்று விரும்புவது ஒரு புறம் இருந்தாலும், அவர்கள் இலங்கைக்குத் திரும்பினால் என்ன நடக்கும் என்று தெரியாமல் அங்கே செல்லலாமா என்பது பற்றி டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு கலந்து கொண்டு தன் கருத்தைத் தெரிவித்திருக்கலாமே என்றுதான் நான் எனது அறிக்கையிலே கூறியிருந்தேன். இதைத் தான் முதலமைச்சர் பன்னீர் செல்வம் வேண்டுமென்றே திரித்துத் திசை திருப்பிடும் வகையில் அறிக்கை விடுத்துள்ளார்.
இறுதியாக பன்னீர்செல்வம் ஒரு குறளைக் குறிப்பிட்டு தன் அறிக்கையை முடித்திருக்கிறார். அந்தக் குறள், “கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து” என்பதாகும். அதாவது “காலம் கை கூடும் வரையில் கொக்கு போல் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும், காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறி தவறாமல் குத்துவது போல் செய்து முடிக்க வேண்டும்” என்பது தான் அதன் பொருள். இந்தக் குறளை பன்னீர்செல்வம் சுட்டிக் காட்டி யிருப்பது எனக்காகவா? அல்லது அவருடைய “அம்மா”வுக்காகவா?” இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.