ஜெயலலிதா தொடர்ந்த வழக்கிற்காக நீதிமன்றத்தில் ஆஜரானார் கருணாநிதி
தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்காக சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி சற்று முன் ஆஜரானார். அவருடன் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் உடன் வந்தார்.
பிரபல வார இதழ் ஒன்றில் வெளிவந்த கட்டுரையை அடிப்படையாக கொண்டு திமுக தலைவர் கருணாநிதி முரசொலி நாளிதழில் அறிக்கை ஒன்றை வெளிட்டதற்காக முரசொலி பத்திரிகையின் ஆசிரியர் முரசொலி செல்வம், கட்டுரை எழுதிய தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோர் மீது, சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு ஒன்றை கடந்த சில நாட்களுக்கு முன் தொடுத்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணைக்காக, சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் மாடியில் உள்ள சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகப் போவதாக கருணாநிதி ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதன்படி வழக்கு ஆவணங்களை பெற்றுக்கொள்ள நீதிமன்றத்திற்கு கருணாநிதி இன்று காலை 10.00 மணிக்கு ஆஜரானார். அவருடன் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவர்களும் உடனிருந்தார்.
கருணாநிதியின் வருகையையொட்டி, அவரை காண சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த தி.மு.க.வி.னரும், வழக்குரைஞர்களும் நீதிமன்றத்தில் குவிந்துள்ளனர். மேலும், வழக்கை விசாரிக்கும் மாவட்ட முதன்மை நீதிமன்றம், உயர் நீதிமன்ற வளாகத்திலேயே இருப்பதால், நீதிமன்ற வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அதே நேரம், வழக்கு தொடர்பானவர்கள் மட்டுமே நீதிமன்ற வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.