இந்த முறையாவது பாலில் விழுமா பழம்? கருணாநிதியின் கடைசி முயற்சி
திமுகவுடன் கூட்டணி இல்லை தனித்து தான் இந்த விஜயகாந்த் தேர்தலை சந்திப்பான் என ஆவேசமாக மகளிர் அணி கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், தற்போது கட்சியின் மாவட்ட செயலாளர்களின் தீவிர எதிர்ப்பு காரணமாக தனது முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளார். மக்கள் நலக்கூட்டணிக்கோ அல்லது பாஜக கூட்டணிக்கோ அவர் செல்லவும் இல்லை, அவர்களும் இவருடைய தலைமையை ஏற்பதாகவும் இல்லை. எனவே வேறு வழியின்றி மீண்டும் திமுகவுடன் விஜயகாந்த் ரகசிய பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதை திமுக தலைவர் கருணாநிதியும் உறுதி செய்துள்ளார்.,
சென்னையில் நேற்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசினார். செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் கூறிய பதில்களும் பின்வருமாறு:
செய்தியாளர்: இன்று நடைபெற்ற மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கியமான விஷயம் என்ன?
கருணாநிதி: புதுவை உள்ளிட்ட மற்றும் தமிழகத்திலே உள்ள 65 கழக மாவட்டச் செயலாளர்கள் இன்றைய கூட்டத்தில், தலைமைக் கழகத்தின் அழைப்பினை ஏற்று கலந்து கொண்டார்கள். இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கிய விஷயம், விரைவில் வரவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலைப் பற்றித் தான் விவாதிக்கப்பட்டது.
செய்தியாளர்: தே.மு.தி.க. தனித்துப் போட்டி என்று அறிவித்திருக்கிறார்கள். அவர்கள் உங்கள் கூட்டணிக்கு வருவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தீர்கள். இந்த நிலையில் உங்கள் நிலைப்பாடு என்ன?
கருணாநிதி: நான் தெரிவித்த நம்பிக்கையை என்னைப் பொறுத்தவரையில் இன்னும் இழந்து விடவில்லை.
செய்தியாளர்: கடந்த முறை கூட்டணி காரணமாக தி.மு.கழகம் குறைந்த தொகுதிகளில் தான் போட்டியிடக் கூடிய நிலை ஏற்பட்டது. தற்போதுள்ள நிலையில் இந்தத் தேர்தலில் தி.மு.கழகம் எத்தனை இடங்களில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது?
கருணாநிதி: இப்போதுள்ள சூழ்நிலையில், உங்களையெல்லாம் அழைத்து, தலைமைக் கழகத்தில் உட்கார்ந்து, உங்களிடம் எல்லாவற்றையும் விவாதித்து எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவோம் என்று நான் சொல்வது எனக்கும் நாகரிகமல்ல; கேட்பது உங்களுக்கும் நாகரிகமல்ல.
செய்தியாளர்: தே.மு.தி.க.வோடு நம்பிக்கை இழந்து விடவில்லை என்று சொன்னீர்கள். அவர்கள் தனித்துப்போட்டி என்று அறிவித்திருக்கிறார்கள். எந்த அளவுக்கு உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது? எப்போது கூட்டணி சம்மந்தமாக அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கலாம்?
கருணாநிதி: நான் எந்த மாதத்தில், எந்தத் தேதியில் என்றெல்லாம் சொல்ல முடியாது. எப்போது அறிவிப்பு என்றும் நாள் குறித்துச் சொல்ல முடியாது. வரலாம்.
செய்தியாளர்: தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எப்போது வெளிவரும்?
கருணாநிதி: விரைவில்.
செய்தியாளர்: உங்களுடைய தேர்தல் பரப்புரை எப்போது தொடங்கும்?
கருணாநிதி: பரப்புரையா? தமிழில் கேட்டதற்காக நன்றி.
செய்தியாளர்: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி உங்களோடு நீண்ட நாட்களாக கூட்டணியிலே உள்ள கட்சி. இப்போது மனித நேய மக்கள் கட்சி உங்கள் கூட்டணியிலே சேருகிறது. அதனால் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு உள்ள இடம் குறையுமா?
கருணாநிதி: குறையாது
இவ்வாறு திமுக தலைவர் கருணாநிதி பதிலளித்தார்.
கடந்த முறை பழம் கனிந்துவிட்டது. அது பாலில் விழவேண்டியதுதான் பாக்கி என்று கூறிய கருணாநிதி இந்த முறை தேமுதிக தங்களுடைய கூட்டணிக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவருடைய பாணியில் இந்த முறையாவது பழம் நழுவி பாலில் விழுகிறதா? அல்லது காலில் விழுகிறதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.