கருணாநிதி மீதான விசாரணை அறிக்கையை கிழித்தெறிந்த திமுக உறுப்பினர்கள். சட்டப்பேரவையில் பதட்டம்
இன்றைய சட்டப்பேரவையில் திமுக தலைவர் கருணாநிதி மீது உரிமை மீறல் பிரச்னை குறித்த விசாரணை அறிக்கை ஒன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனால் கடும் ஆத்திரமடைந்த திமுக உறுப்பினர்கள் அந்த விசாரணை அறிக்கையை கிழித்தெறிந்ததால் சட்டப்பேரவையில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.
சமீபத்தில் திமுக தலைவர் கருணாநிதி அமைச்சர் வைத்திலிங்கம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். தான் பேசாததை கருணாநிதி தனது அறிக்கையில் கூறியிருந்ததாக அமைச்சர் வைத்திலிங்கம் புகார் கூறினார்.
இந்தநிலையில், கருணாநிதி மீதான உரிமை மீறல் பிரச்னை குறித்த விசாரணை அறிக்கையை, சட்டப்பேரவையில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் இன்று தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இதனால் திமுக உறுப்பினர்கள் சபாநாயகரை முற்றுகையிட்டு விசாரணை அறிக்கையை கிழித்து எறிந்தனர். இதனால், சட்டப்பேரவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, திமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டதை தொடர்ந்து, திமுக உறுப்பினர்களை குண்டுகட்டாக அவைக் காவலர்கள் வெளியேற்றனர்.
இதைத் தொடர்ந்து, கருணாநிதி மீதான உரிமை மீறல் பிரச்னை பற்றி விவாதிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட், புதிய தமிழகம் கட்சிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால், தீர்மானம் நிறைவேற்றிய பிறகு அவையில் விவாதிக்க முடியாது என சபாநாயகர் நிராகரித்தார். இதனை கண்டித்து மார்க்சிஸ்ட், புதிய தமிழகம் கட்சிகள் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் பேசிய சபாநாயகர் தனபால், அவையில் பேசாததை பேசியதாக கருணாநிதி தனது அறிக்கையில் வெளியிட்டது கண்டித்தக்கது. இதுபோல் இனிமேல் உறுப்பினர்கள் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து கூறியபோது, “முறையாக விளக்க கடிதம் எழுதிய பிறகும் கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கேள்வி கேட்ட திமுக உறுப்பினர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது கண்டிக்கத்தக்கது. சட்டமன்றத்தில் அடக்குமுறையை ஏவுவதால் எந்த பயனும் இருக்கப் போவதில்லை’ என்று கூறினார்.