நன்றியை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன். திருவாரூரில் கருணாநிதி பேச்சு
திமுக தலைவர் கருணாநிதி திருவாரூரில் தான் படித்த பள்ளி கட்டடத்தை திறந்து வைத்து தான் என்றும் நன்றியை மறப்பவன் அல்ல என்று உணர்ச்சிபூர்வமாக பேசினார்.
கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தனது சொந்த ஊர் அடங்கிய தொகுதியான திருவாரூரில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணாநிதி நீண்ட இடைவெளிக்கு பின்னர் தனது தொகுதிக்கு நேற்று சென்றார். அங்கு சட்டமன்ற தொகுதி நிதியில் இருந்து கட்டப்பட்ட பொது வினியோக கட்டடம், புதிய வகுப்பறை கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், “பள்ளிக் கூடங்கள், வகுப்பறைகள், சந்தித்த ஆசிரியர்களை எண்ணிப்பார்க்கும் போது எவ்வளவு பெரிய பூரிப்பும், மன எழுச்சியும் ஏற்பட்டுள்ளது என்பதை நான் தான் உணர முடியும். இந்த மகிழ்ச்சி, பாராட்டுகளை எல்லாம் கேட்டு வாழ்த்த எனது தாயார் இல்லையே என்ற ஏக்கம் உள்ளது. எனது இளமைக் கால திறமைகள், எங்கே பிறந்தேன், வளர்ந்தேன், யாரால் வளர்க்கப்பட்டேன் என்பதை சொல்ல விரும்பவில்லை. சாதாரண கிராமத்தில் எளிமையான விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன்.
விவசாயக் குடும்பத்தில் பிறந்ததால் விவசாயிகளை பாதுகாக்க வேண்டும், அதற்கான சூழலை உருவாக்க வேண்டும், ஏழை- எளியவர்களுக்கு பாடுபட வேண்டும் என்ற நிலையை வளர்த்துக்கொண்டேன். இங்கே உள்ளவர்களை பார்க்கும் போது பூரிப்பு அடைகிறேன். முதல்வர், கட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளையெல்லாம் விட என் மீது கொண்டுள்ள அன்பு தான் எனக்கு பெரியது. அந்த உணர்வு தற்போது காணுகிறேன்.
திருவாரூர் தொகுதியில் வெற்றிப் பெற்று சட்டப்படி தொகுதி மேம்பாட்டு நிதி வழங்க ஆவண செய்துள்ளேன். மன்னார்குடி, திருவாரூர், கூத்தாநல்லூர் இன்னும் பிற பகுதிகளின் மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கியுள்ளேன். ஒதுக்கிய நிதியை பெற்று செலவு செய்தவர்கள் கட்டடங்களுக்கு, வகுப்பறைகளுக்கு செய்ததுக்காக நண்பர்கள், நிர்வாகிகளை பாராட்டுகிறேன்.
சர்.ஏ.டி பன்னீர்செல்வம் திராவிட இயக்கத்தில் இருந்த போது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களின் மேம்பாட்டுக்காக போராடினார். அன்றைய காலக்கட்டத்தில் நான் 8, 9ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். சர்.ஏ.டி பன்னீர்செல்வம் செய்த நன்றியை நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கும் வகையில் நான் எழுதிய பராசக்தி திரைப்பட கதையில் ஒரு பாத்திரம் வைத்திருந்தேன். நன்றியை என்றைக்கும் நான் மறக்க மாட்டேன்.
நன்றியை மறக்க கூடாது. சமுதாயத்துக்காக பாடுபட்டவர்கள் பெயரை மறக்கக் கூடாது. இந்த பாராட்டுகளை நான் உரமாக எடுத்துக்கொள்கிறேன். இந்த பள்ளியில் படித்த காரணத்துக்காக விடுத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும், மறக்க மாட்டேன்” இவ்வாறு கருணாநிதி பேசினார்.