காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த ஜனநாயக வெற்றி. கருணாநிதி குறிப்பிடுவது எதை தெரியுமா?
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை ரத்து செய்து டெல்லி ஐகோர்ட் சமீபத்தில் அதிரடி தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பு மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டு வரும் நிலையில் வரலாற்று சிறப்புமிக்க இந்தத் தீர்ப்பு மத்திய ஆளுங்கட்சியான பா.ஜ.க. வுக்கு ஏற்பட்டிருக்கும் இரண்டாவது பெரும் பின்னடைவு என்று திமுக தலைவர் கருணாநிதி கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரீஷ்ராவத் தலைமையில் காங்கிரஸ் அரசு நடந்து வந்தது. அப்போது சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க சந்தர்ப்பம் அளிக்காமல் எவ்வித முகாந்திரமும் இல்லாமல் ஜனாதிபதி ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது.
இதை எதிர்த்து நைனிடால் உயர் நீதி மன்றத்தில் நடந்த வழக்கில், ஜனாதிபதி ஆட்சியைத் திணித்தது செல்லாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்திய உச்ச நீதிமன்றமும் இந்தத் தீர்ப்பை உறுதி செய்ததுடன், சட்டசபையில் பலப்பரீட்சை நடத்தி அதனடிப்படையில் முடிவு செய்ய உத்தரவிட்டது.
வாக்கெடுப்பில் ஹரீஷ் ராவத் வெற்றி பெற்று, மீண்டும் முதல்-அமைச்சர் ஆனார்.
அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் நபாம் துகி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. மொத்தம் 60 எம்.எல்.ஏ.க்கள். காங்கிரசின் பலம் 47 ஆக இருந்தது. இதில் 21 எம்.எல்.ஏ.க்கள் முதலமைச்சருக்கு எதிராக போர்க் கொடி தூக்கினர்.
அவர்களுக்கு பா.ஜ.க. வின் 11 எம்.எல்.ஏ.க்களும் 2 சுயேச்சைகளும் ஆதரவு அளித்தனர். இதற்கிடையே அதிருப்தி கோஷ்டியைச் சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்களைத் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதை அடுத்து, மாநில ஆளுநர் அறிக்கையின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் ஆட்சி பிறப்பிக்கப்பட்டது. அதன் பிறகு காங்கிரஸ் அதிருப்தி கோஷ்டியைச் சேர்ந்த கலிகோ புல் புதிய முதல் அமைச்சராக பதவியேற்றார்.
அவருக்கு அதிருப்தி கோஷ்டியைச் சேர்ந்த 18 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், 2 சுயேச்சைகள், 11 பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்தனர். இதை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் நபாம் துகி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, அந்த வழக்கு நீதிபதி ஜெ.எஸ். கேகர் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
நேற்றைய தினம் அளிக்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பில், “அருணாச்சலப் பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சி பிறப்பித்தது செல்லாது; அங்கே ஆளுநர் பிறப்பித்த உத்தரவுகள் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு விரோதமானவை.; டிசம்பர் 9க்குப் பிறகு அவர் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
அங்கு மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்க அனுமதிக்க வேண்டும்” என்று அரசியல் சாசன அமர்வு உத்தரவு பிறப்பித்திருப்பது, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மூலமாக உத்தரகாண்ட் மாநிலத்தில் கிடைத்த பலத்த அடியை அடுத்து, இரண்டாவது முறையாக விழுந்த சம்மட்டி அடி என்றே சொல்ல வேண்டும்.
உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள சிறப்பான இந்தத் தீர்ப்பு மத்திய ஆளுங்கட்சியான பா.ஜ.க. வுக்கு ஏற்பட்டிருக்கும் இரண்டாவது பெரும் பின்னடைவாகவும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த ஜனநாயக ரீதியான வெற்றியாகவும் தான் அரசியல் நோக்கர்களால் கருதப்படும்.
மத்திய ஆளுங்கட்சியின் முடிவினை அப்படியே ஆதரிக்காமல், உச்ச நீதிமன்றம் விருப்பு வெறுப்பில்லாமல், இந்திய ஜனநாயகத்தைச் செழுமைப்படுத்திடும் நோக்கில் அளித்துள்ள இந்தத் தீர்ப்பினை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்கிறேன்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 356வது பிரிவைத் திட்டமிட்டுப் பயன்படுத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கலைத்திடும் ஜனநாயக விரோதப் போக்கை, நீண்ட நெடுங்காலமாகவே எதிர்த்துக் குரல் கொடுப்பதில் முன்னணியில் நிற்கும் திராவிட முன்னேற்றக் கழகம், மக்களாட்சியின் மாண்புகளைக் காக்கும் இந்த மகத்தான தீர்ப்பு கண்டு களிப்புறுகிறது.
இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.