காமன்வெல்த் மாநாடு பற்றி கருணாநிதி பேச்சு

திமுக பேரவை உறுப்பினர்களின் அவசரக் கூட்டம் கருணாநிதி தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. காலை 11.15 மணிக்குத் தொடங்கி 12.15 மணி வரை இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இதில், பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பேரவை திமுக கொறடா அர.சக்கரபாணி உள்பட கட்சியின் பேரவை உறுப்பனர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கருணாநிதி கூறியதாவது, இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற திமுகவின் கருத்தை முழுமையாக மத்திய அரசு கேட்கவில்லை. அதற்காக அதிருப்தியை வெளியிட வேண்டியவர்களாக உள்ளோம்.

காமன்வெல்த் மாநாட்டுக்கு இந்தியா சார்பில் துரும்புகூட செல்லக்கூடாது என்பதுதான் திமுகவின் திட்டவட்டமான கருத்து. பேரவையில் சென்று அமர்வதற்கு எனக்கு அமர இடம் இல்லை. அதனால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

சல்மான் குர்ஷித் இலங்கைக்குச் செல்வது தொடர்பாக திமுகவின் எதிர்ப்பை ஏற்கெனவே தெரிவித்துள்ளோம். அவர் செல்வதை எதிர்த்து இப்போது போராட்டம் நடத்துவதாக இல்லை. இலங்கைத் தமிழர் பிரச்னைக்காகப் பல போராட்டங்களை நடத்தியுள்ளோம். சல்மான் குர்ஷித் செல்வது தொடர்பாக போராட்டம் தேவைப்படுமானால், நாங்கள் நிச்சயம் நடத்துவோம்.

இலங்கை பிரச்சனையில் திமுகவுக்கும் போராட்ட உணர்வுகள் இருக்கின்றன. யார் யார் எப்போது எந்த இடத்தில் போராட்டம் நடத்துவர் என்பது பின்னர் அறிவிக்கப்படும். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக அரசின் சார்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அதில் எத்தகைய கருத்து வேறுபாடும் இல்லாமல் ஒருமனதாக ஆதரித்து நிறைவேற்றுவதுதான் தமிழக மக்களுடைய ஒற்றுமையை எடுத்துக் காட்டுவதாக இருக்கும்.

அதனால் தீர்மானத்தை வெற்றிகரமாக அமைதியாக நடத்திச் செல்வது தொடர்பாக திமுக உறுப்பினர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பேரவையில் வரும் தீர்மானத்தை ஆதரிப்பது எங்களின் கடமையாகும் என்றார் கருணாநிதி.

காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்காதது ஆறுதல் அளிக்கிறது என்று கூறியது முழு மனதோடு இல்லை என்று கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார். எனது கருத்து அரை மனதாகக் கூறப்பட்டது. அதே நேரத்தில் அதை வரவேற்றும் சொல்லவில்லை. விவாதத்துக்குரியது என்றுதான் கூறினேன் என்றார் கருணாநிதி.

Leave a Reply