எதிர்காலம் என்ன ஆகும்? திருமண விழாவில் அரசியல் பேசிய கருணாநிதி
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்த ஒரு திருமண விழாவில் பேசிய கருணாநிதி, இந்த ஆட்சியை மேலும் அனுமதித்தால் மக்களுடைய எதிர்காலம் என்ன ஆகும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இல்லறம் என்ற தங்களுடைய எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு திருமண விழாவில் எதிர்காலம் என்ன ஆகும்? என்று கருணாநிதி பேசியது அந்த விழாவிற்கு வந்தவர்களிடையே ஒரு சிறு சலசலப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
திமுக அமைப்புச் செயலாலர் ஆர்.எஸ்.பாரதியின் இல்ல மண விழாவ சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கருணாநிதி, “இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள சூழலை நீங்கள் எல்லாம் உணர்வீர்கள். எப்படி இந்த மணவிழாவிலே மகிழ்ச்சியோடு நாம் நம்முடைய கருத்துகளை இங்கே வெளிப்படுத்தி வருகிறோமோ, அதைப் போல அந்தக் கருத்துகள் வெற்றி பெறவும், அந்த வெற்றி தமிழ்நாட்டிலே ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய வெற்றியாக அமைய வேண்டும் என்பதையும் நான் உங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகிறேன். என்ன மாற்றம் என்பது உங்களுக்குத் தெரியும்.
ஒரு மாற்றத்தினை உருவாக்க வேண்டுமென்று ஒரு திருமண விழாவில் நான் உங்களைக் கேட்டுக் கொள்வதோ – நம்முடைய பேராசிரியர் கேட்டுக் கொள்வதோ பொருத்தமானது அல்ல. எனக்குத் தெரியும்.
ஆனால் தமிழ்நாட்டைப் பற்றி எண்ணும்போது, நாட்டில் விலைவாசிகள் ஏறியிருக்கின்ற கொடுமைகளை எண்ணிப் பார்க்கும் போது, இதை இப்படியே விட்டு விடுவது சிறப்புடையதா, அப்படிச் செய்தால் மக்களுடைய எதிர்காலம் என்ன ஆகும் என்பதையெல்லாம் நாமும் சிந்தித்து, நம்முடைய தாய்மார்களையும் சிந்திக்க வைத்து, நம்முடைய பாட்டாளி மக்களையும், உழவர் பெருமக்களையும் சிந்திக்கச் செய்து, அந்த மாற்றத்தை உருவாக்குவதற்கு நாமெல்லாம் முன் வந்தால்தான், நாம் அதற்காகத் தொண்டாற்றினால்தான், இந்த விழாவில் நான் உங்களிடம் சில கருத்துகளை எடுத்துச் சொன்னதற்கு அர்த்தம் உள்ளதாகக் கருதப்படும்.
எனவே அந்த அர்த்தத்தைச் செயல்படுத்துகின்ற வகையில் திராவிட முன்னேற்றக் கழகம் – நம்முடைய குடும்பக் கழகம் – நம்முடைய வீட்டுக் கழகம் என்ற உணர்வோடு அனைவரும் பணியாற்ற வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாம் எடுத்துச் சொல்கின்ற கருத்துகளை, கொள்கைகளை செயல்படுத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டு, அப்படிப்பட்ட காரியங்களிலே எதிர்காலத் தலைமுறை, என்னுடைய தம்பிமார்கள், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஈடுபட வேண்டும். அப்படி ஈடுபட்டால்தான் இந்த நாட்டிற்கு ஏற்பட்டிருக்கின்ற களங்கத்தை நாம் துடைக்க முடியும். நல்லாட்சியைக் கொண்டு வர முடியும்.
தமிழ்நாட்டில் இப்போது ஆட்சி என்று ஒன்று இருக்கிறது. ஆனால் அந்த ஆட்சியை நடத்துகிறவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு பதில் கிடையாது. ஆட்சி இருக்கலாம், ஆனால் ஆட்சியை நடத்துவதற்கு யாரும் கிடையாது.
யாரால் இந்த ஆட்சி நடக்கிறது என்று சொல்ல முடியுமா என்றால் சொல்ல முடியாது. தமிழ்நாட்டில் தற்போது நடைபெறுகின்ற ஆட்சி – மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி இன்றைக்கு மக்களையே மறந்து விட்டு, மக்களின் எதிர்காலத்தை மறந்து விட்டு, தமிழர்களை மறந்து விட்டு, தமிழ் மொழியை மறந்து விட்டு, தமிழ்நாட்டையே மறந்து விட்டு, தமிழர்களுடைய எதிர் காலத்தை மறந்து விட்டு நடைபெறுகின்ற ஆட்சியாக இருப்பதால், அந்த ஆட்சியை அனுமதிக்க முடியுமா என்ற இந்தக் கேள்வியை ஒவ்வொருவரும் கேட்டுக் கொள்ள வேண்டும்”
இவ்வாறு திமுக தலைவர் கருணாநிதி பேசினார்.