உணவருந்தக் கூட பணம் இல்லாத நிலை. கருணாநிதி அறிக்கை

உணவருந்தக் கூட பணம் இல்லாத நிலை. கருணாநிதி அறிக்கை

karunanidhiமூன்று தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் கடுமையாக பணியாற்றி வரும் திமுக தொண்டர்கள், மத்திய அரசின் ரூபாய் நோட்டு குறித்த நடவடிக்கையால் உணவருந்த கூட பணம் இல்லாத நிலையில் உள்ளனர் என்று திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இடைதேர்தல் வேட்பாளர்களும், தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள், தோழமை கட்சிகள் என அனைவரும் பம்பரமாக சுழன்று, சுழன்று பணி புரிந்து வருகிறார்கள். இடைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு கழகத்தின் தலைவர் என்ற முறையிலே நான் நேரடியாக வரவியலாது போய்விட்டாலும், என் உடல் நலக் குறைவைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் அன்றாடம் அங்குள்ள நிலவரம் குறித்து ஏடுகளில் படித்தறிந்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.

இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக நானும், பொதுச் செயலாளர் பேராசிரியரும் நேரில் செல்லாவிட்டாலும், கழகப் பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கழக முன்னணியினர், தொண்டர்கள் அனைவரும் தொகுதிகளிலேயே முகாமிட்டு இடையறாது வாக்கு கேட்டு வருகிறார்கள்.

இந்த நேரம் பார்த்து மத்திய அரசு 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துள்ள காரணத்தால், தேர்தல் பணியாற்றும் கழகத் தோழர்களுக்கு உணவருந்தக் கூட பணம் இல்லாத நிலையில் திண்டாடுவதாகச் செய்திகள் வந்துள்ளன. ஆனால் நம்மை எதிர்த்துப் போட்டியிடும் அதிமுக-வினர், அமைச்சர்களின் தலைமையில் தாங்கள் குவித்து வைத்துள்ள தொகையை ஆடம்பரமான முறையிலே செலவழித்து குதூகலம் கொண்டாடி வருகிறார்களாம்

இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply