மீனவர்கள் பிரச்சனைக்ககு தீர்வு காண மத்திய மாநில அரசுகளின் ஆக்கபூர்வமான நடவடிக்கை தேவை. கருணாநிதி

மீனவர்கள் பிரச்சனைக்ககு தீர்வு காண மத்திய மாநில அரசுகளின் ஆக்கபூர்வமான நடவடிக்கை தேவை. கருணாநிதி
karunanidhi speech
தமிழக மீனவர்களின் பிரச்னைகள் தொடர்ந்து கொண்டே செல்வதாகவும், இதற்கு ஒரு தகுந்த தீர்வே கிடையாதா என்று வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடனடியாக இந்தப் பிரச்னைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் உகந்த தீர்வைக் காணவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கை சிங்களவாத அரசை, இந்திய அரசு என்ன தான் திரும்பத் திரும்ப நட்பு நாடு என்று சொல்லி வந்த போதிலும், அந்த நல்லெண்ணத்தில் ஓரளவாவது இலங்கை அரசுக்கு இருக்கிறதா என்ற கேள்வி தமிழ் மக்களிடையே பல ஆண்டுக் காலமாக விடையின்றி இருந்து வரும் நிலையில், அதே அய்யப்பாட்டினை மீண்டும் மீண்டும் நிரூபித்திடும் வகையிலே தான் சிங்கள அரசின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகின்றன.

குறிப்பாக தமிழகத்தின் பல பகுதிகளிலேயிருந்து மீன் பிடிப்பதற்காகச் செல்லும் அப்பாவி மீனவர்களை இலங்கை அரசின் கடற்படையினர் என்ன பாடுபடுத்தி அலைக்கழித்து வருகிறார்கள் என்பதைத் தொடர்ந்து நாம் கண்டு கலக்கமடைந்து வருகிறோம். ஒவ்வொரு முறையும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, இலங்கைச் சிறையிலே அடைக்கப்பட்டதும், நமது மீனவர்கள் உண்ணாவிரதம் இருப்பதும், உடனடியாக தமிழக முதலமைச்சர் இந்தியப் பிரதமருக்குக் கடிதம் எழுதுவதும், பிரதமரும் அந்தக் கடிதத்தை வெளியுறவுத் துறைக்கு அனுப்பி, அவர்கள் இலங்கை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வதும் தான் வழக்கமாகிப் போய் விட்ட நடைமுறை.

ஆனால் அதைப் பற்றி எந்தக் கவனமும் எடுத்துக் கொள்ளாமல் கவலையின்றி இருக்கும் இலங்கை அரசினர், ஒரு சில நாட்களுக்குப் பிறகு இலங்கைச் சிறையிலே இடம் இல்லாத காரணத்தாலோ என்னவோ தன்னிச்சையாக விடுதலை செய்து இந்தியாவுக்கு அனுப்புகிறார்கள். தொடர்ந்து இப்படிப்பட்ட பிரச்சினைகளுக்கு தமிழக மீனவர்கள் உட்படுத்தப்பட்டு, துன்பங்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.

மத்திய, மாநில அரசுகள் இனியாவது ஆக்கபூர்வமான தீவிரமான முயற்சியை மேற்கொண்டு, வருங்காலத்தில் தமிழக மீனவர்களுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை என்று உறுதிப்படுத்துவதற்கு உகந்த வழி காண வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply