பாராளுமன்ற தேர்தல் தோல்வியை காரணமாக வைத்து திமுகவையும், ஸ்டாலினையும் வீழ்த்த நினைப்பவர்களை தரைமட்டமாக்குவோம். அவர்களுடைய கனவு பலிக்காது என திமுக தலைவர் கருணாநிதி இன்று காரசாரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் இந்த அறிக்கை மூலம் அவரது மூத்த மகன் மு.க.அழகிரிக்கு எச்சரிக்கை விடுத்திருப்பதாகவே திமுகவினர் கருதுகின்றனர்.
மேலும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் “தி.மு.க.வை இந்தத் தேர்தலோடு ஒழித்துக் கட்டி விடலாம் என்று கனவு கண்ட அவர்களிடையே, அடுத்து காண இருக்கின்ற களங்களுக்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்ளும் இந்தச் சூழலில், இந்தக் கருத்து விளக்கத்தை புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகத் தருகிறேன். ஏதோ இந்த நாடாளுமன்றத் தேர்தலோடு தி.மு.க.வின் வரலாறு முடிந்து விட்டது என்பதைப் போலவும், அடுத்து தி.மு.க. எழவே எழாது, எழுந்து நடக்கவே செய்யாது என்ற நினைப்புடனும் தி.மு.க.வை இப்போதும் விடாமல் விமர்சித்து வருகிறார்கள்.
குறிப்பாக அப்படி விமர்சிப்பவர்கள் என்னைத் தாக்கிப் பேசியும் எழுதியும் நம்முடைய உயிரனைய தம்பிமார்களையும், உழைத்து இந்தக் கழகம் வளர்த்த தளபதிகளையும்; இழித்தும் பழித்தும், மக்கள் மன்றத்தில் அவர்களைப் பற்றிய சந்தேகங்களை எழுப்பியும், பிரசாரம் செய்வதில் இருந்தே அவர்களை தி.மு.க. தொண்டர்களிடம் இருந்து பிரித்து விடலாம் என்று கனவு காண்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஒன்று சொல்வேன். தயவு செய்து தி.மு.க. வரலாற்றைத் திரும்பிப் பாருங்கள். அதை எத்தனை எத்தனையோ வம்பர்களும், வஞ்சகர்களும் வீழ்த்த எண்ணி வீசிய வலைகள் எல்லாம் அறுந்து தூள் தூளாகப் போய்விட்டன என்பதை இந்த நாடு உணரும், நாமும் உணர்வோம்.
சமீபகாலமாக திமுக தலைமையையும், ஸ்டாலின் குறித்தும் மு.க.அழகிரிதான் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். திமுக இனி எழுந்திருக்காது என நேற்று கூட மதுரையில் இருந்து அறிக்கைவிட்டார். அவருக்கு பதிலடி கொடுப்பதற்காகவே கருணாநிதி இந்த அறிக்கையை விடுத்துள்ளதாக திமுகவினர் மத்தியில் கூறப்படுகிறது.