கே.என்.நேரு, திருச்சி சிவா ஆதரவாளர்களுக்கு கருணாநிதி எச்சரிக்கை
திருச்சி மாவட்டத்தில் திமுகவின் முக்கிய புள்ளிகளாக விளங்கி வரும் திருச்சி சிவா மற்றும் கே.என்.நேரு ஆகிய இருவருக்கும் திமுக தலைவர் கருணாநிதி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். உள்கட்சி மோதலை இருவரும் தவிர்க்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
திமுகவுக்கு அதிக செல்வாக்கு இருக்கும் மாவட்டங்களில் ஒன்று திருச்சி. திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவும் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவும், திருச்சி மாவட்டத்தில் தனித்தனி கோஷ்டிகளாக செயல்பட்டு வருகின்றனர்.
கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ராமஜெயம் கொலையான பிறகு நேருவின் செல்வாக்கு சரியத் தொடங்கியதாக கூறப்படுகிறது. மேலும் திருச்சி சிவாவின் மகன் சூர்யா அரசியலில் புகுந்ததும் நேருவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், திருச்சி தில்லை நகர் சாஸ்திரி சாலையில் உள்ள நேருவின் அலுவலகத்தை சிவாவின் ஆதரவாளர்கள் சுமார் 50 பேர் நேற்று முன்தினம் முற்றுகையிட்டனர். அதற்கு பதிலடியாக நேருவின் ஆதரவாளர்கள் சுமார் 100 பேர் சிவாவின் வீட்டை முற்றுகையிட முயன்றனர். சிலர் விமான நிலையம் அருகே உள்ள சிவாவின் மகன் சூர்யாவின் நிறுவனத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
திருச்சி திமுகவில் அனல் பறக்கும் உள்கட்சி பிரச்சனையால் திமுக தலைமை இருதரப்பினர் மீதும் கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி, இரு தரப்பினரையும் தொலைபேசியில் அழைத்து கடும் எச்சரிக்கை விடுத்ததாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
கட்சியினர் இப்படி மோதிக் கொள்வது வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்பதால் கட்சியைக் காக்க எந்த எல்லைக்கும் செல்வேன் என கருணாநிதி எச்சரித்ததாக கூறப்படுகிறது. மேலும் இரு தரப்பினரையும் கருணாநிதி சென்னைக்கு அழைத்துள்ளதாகவும், ஓரிரு நாளில் அவர்கள் நேரில் விளக்கம் அளிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் உள்கட்சி பூசல் உச்ச கட்டத்தை அடைந்து வருவது திருச்சி திமுக தொண்டர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
Chennai Today News: Karunanidhi warned to K.N.Nehru and Trichi Siva