மத்தியில் கடந்த 15 வருடங்களாக ஆளுங்கட்சிக்கு ஆதரவு கொடுத்து மத்திய அமைச்சரவையில் முக்கிய பங்கை வகித்து வந்த திமுக, கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று, நரேந்திர மோடி பிரதமர் ஆனபின்னர், திமுகவின் முக்கிய தலைவர்கள் நீதிமன்றங்களின் படியேறி வருவது வாடிக்கையாகிவிட்டது.
தற்போது சி.பி.ஐ மற்றும் அமலாக்கத் துறையின் அதிரடி நடவடிக்கைகள் கருணாநிதியை கலங்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. “தயாளு அம்மாள், கனிமொழி, தயாநிதி, கலாநிதி, அமிர்தம் என தனது குடும்பத்தின் முக்கிய ஐந்து பேர்கள் பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ளது கருணாநிதியை பெரிதும் வருத்தமடைய வைத்துள்ளதாக திமுக வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவருகின்றது.
ஏற்கெனவே 2ஜி வழக்கில் கலைஞர் டி.வி சிக்கி உள்ள நிலையில் தற்போது சன் டி.வியும் மாட்டி உள்ளதால் இந்த இரண்டு டிவிக்களும் முடங்கிவிட்டால் கட்சியின் பிரச்சாரத்திற்கு பெரிதும் பின்னடைவு ஏற்படும் என கருணாநிதி உள்பட திமுகவின் முன்னணி தலைவர்கள் கதிகலங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரங்கள் சம்பந்தமாக தனது குடும்பத்தினர் நீதிமன்றம் செல்வதை கவலையுடன் கருணாநிதி பார்க்கிறார் என்றும் ‘இன்னும் என்ன மாதிரியான கஷ்டமெல்லாம் அனுபவிக்கப் போறேனோ’ என்று அவர் கலங்கியதாகவும் உடன்பிறப்புகள் வட்டாரங்கள் கூறுகின்றன.