சோனியா காந்தி தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றிருக்க கூடாது. கருணாநிதி
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி சமீபத்தில் உ.பியில் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் டெல்லி திரும்பிய சோனியா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவருக்கு சிறிய அளவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், தற்போது அவர் குணமடைந்து வருவதாகவும் டெல்லி மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சோனியா காந்தி விரைவில் குணமடைந்து மீண்டும் அரசியல் பணியாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் துணைத்தலைவரும் சோனியா காந்தியின் மகனுமான ராகுல் காந்திக்கு, திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: ‘வாரணாசி தேர்தல் பிரசாரத்தின் போது சோனியா காந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை கேட்டு தாம் வருந்தியதாகவும், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சோனியா காந்தி, பிரசாரத்திற்கு செல்ல அறிவுரை வழங்கப்பட்டிருக்க கூடாது என்றும் குறிப்பிட்ட அவர் தற்போது சோனியா காந்தி குணமடைந்து வருவதாக வெளியான செய்தியை கேட்டு தமிழக மக்களுடன் தாமும் நிம்மதியடைந்திருப்பதாக கூறியுள்ளார்.
விரைவில் அவர் குணமடைந்து அரசியல் பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ள கருணாநிதி, தன்னுடைய ஆறுதல்களையும், வாழ்த்துகளையும் சோனியா காந்தியிடம் தெரிவிக்கமாறு ராகுல் காந்தியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.