மதுவிலக்கு அறிவிப்பு கபட நாடகமாம். கூறுகிறார் கருணாநிதி
பழம் நழுவி பாலில் விழாமல் தரையில் விழுந்த அதிருப்தியில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதி தற்போது அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு குறித்த அறிவிப்பு எதுவும் வந்துவிடக்கூடாது என்பதற்காக முன்கூட்டியே அதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு தனது சாணக்கியத்தனத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார்.
தேர்தல் நேரத்தில் மற்ற கட்சிகள் அனைத்தும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை கொண்டு வருவோம் என்று கூறும்போதெல்லாம் அதுகுறித்து விமர்சனம் செய்யாத கருணாநிதி, அதிமுக தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு குறித்த அறிவிப்பு வர வாய்ப்புள்ளது என்பதை தெரிந்து கொண்டு அந்த அறிவிப்பு அதில் வராமல் இருக்க ஒரு சூடான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
கருணாநிதியின் அறிக்கையில், ‘தேர்தலில் மக்களை ஏமாற்றுகின்ற நோக்கத்தோடு, ஏமாற்றி வாக்கு அறுவடை செய்துவிடலாம் என்ற நப்பாசையோடும், கபட எண்ணத்தோடும், அ.தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில், தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மது விலக்கைக் கொண்டு வரப்போவதாக அறிவிக்க இருக்கிறதாம்! ஆட்சியிலே இருந்த ஐந்தாண்டுகளில் செய்திட மனம் வராததை, தேர்தல் அறிக்கையில் ஊரை ஏமாற்றச் செய்யப் போகிறார்களாம்! என்று கூறியுள்ளார்.
ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதி அப்போதெல்லாம் செய்யாத மதுவிலக்கை வரும் தேர்தலில் வெற்றி பெற்றால் மதுவிலக்கை கொண்டு வருவோம் என்று கூறியது மக்களின் நன்மைக்காக என்றும், அதே அறிவிப்பை அதிமுக அறிவித்தால் கபட நாடகம் என்றும் கூறியுள்ளது அறிக்கையை படிப்பவர்களுக்கு தலை சுற்றுகிறது. கருணாநிதியின் அலங்கார வார்த்தைகள், சாணக்கியத்தனம் அனைத்தையும் மக்கள் புரிந்து கொண்டுள்ளதால் இந்த அறிக்கை பெரிதாக பேசப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.