எனக்கு வாக்களித்த 75,000 மக்களுக்காக நான் பணியாற்றி வருகிறேன். கருணாஸ்
நகைச்சுவை நடிகரும், திருவாடனை தொகுதி எம்.எல்.ஏவுமான கருணாஸ், தன்மீது சமூக வலைதளங்களில் அவதூறாக செய்தி வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
“முதல்வர் தேர்வு குறித்து நான் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால், நான் கூறாத கருத்தை கூறியதாக சில பேர் சமூக வலைதளங்களில் அவதூறாக செய்தி பரப்பி வருகின்றனர். நான் ஒரு சமூகத்தை சார்ந்த இயக்கம் நடத்தி வந்தாலும், அனைத்து மக்களையும் அரவணைத்து செல்கிறேன்.
நான் சட்டமன்ற உறுப்பினரானது எனது சமூகத்தில் உள்ளவர்களுக்கே பிடிக்கவில்லை. எனக்கு வாக்களித்த 75,000 மக்களுக்காக நான் உண்மையாக பணியாற்றி வருகிறேன். இனி எந்த கருத்தை நான் தெரிவிப்பதாக இருந்தாலும், வெளிப்படையாகவே தெரிவிப்பேன். எனவே, சமூக வலைதளங்களில் நான் கூறியதாக ஏதேனும் கருத்து வந்தால் அதை பொது மக்கள் நம்ப வேண்டாம்.” எனக் கூறினார்.