பெங்களூர் சிறையில் உள்ள ஜெயலலிதாவை விடுவிக்க வலியுறுத்தி தூத்துக்குடியில் மீனவர் பிரதிநிதிகள் சார்பில் நடுகடலில் ஆர்ப்பாட்டம் நடத்தபட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதனால் தற்போது அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜெயலலிதாவை விடுவிக்கக்கோரி தமிழகம் முழுவதும் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களும், உண்ணாவிரதங்களும் நடைபெற்று தங்கள் எதிர்ப்பை தமிழக மக்கள் காட்டி வருகின்றனர். இந்நிலையில், ஜெயலலிதாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குள் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மீனவ கூட்டுறவு சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட இந்த போராட்டத்துக்கு அகஸ்டீன் என்பவர் தலைமை தாங்கினார்.
பத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகில் கிளம்பிய மீனவ பிரதிநிதிகள், சுமார் ஐம்பது மீட்டர் தூரத்தில் வைத்து, முன்னாள் முதல்வர் கருணாநிதி, பா.ஜ.க. பிரமுகர் சுப்பிரமணியசாமி ஆகியோரின் உருவ மொம்மைகளை கடலுக்குள் தூக்கி வீசி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.