காஷ்மிர் மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா பதவி விலகிவிட்டு மக்களவை தேர்தலுடன் சேர்த்து மாநிலங்களவை தேர்தலை நடத்த முடிவு செய்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
காஷ்மீர் மாநிலத்தில் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா தலைமையிலான அமைச்சரவை ஆட்சி செலுத்தி வருகிறது. காஷ்மீர் மாநிலத்தில் உமர் அப்துல்லா கட்சிக்கு 28 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் 20 எம்.எல்.ஏக்கள் ஆதரவில்தான் அந்த கட்சி ஆட்சி அமைத்து வருகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கும், உமர் அப்துல்லாவுக்கும் அடிக்கடி கருத்துவேறுபாடு ஏற்பட்டு வருவதால் வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் மாநில சட்டசபை தேர்தலையும் சேர்த்து நடத்துவதற்கு வசதியாக காஷ்மீர் முதல்வர் முடிவு செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
உமர் அப்துல்லா பதவி விலகுவது குறித்த செய்தி வெளியானவுடன் காங்கிரஸ் கட்சியின் அவசர கூட்டம் ஒன்று நேற்று மத்திய அமைச்சர் அம்பிகா சோனி வீட்டில் நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் குலாம் நபி ஆசாத், காஷ்மீர் மாநிலகாங்கிரஸ் தலைவர் சபுதீன் சோஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.