காஷ்மீரில் விடாது பெய்யும் கன மழையால் ஜீலம் ஆறு அபாய கட்டத்தைத் தாண்டி பாய்வதால் பொது மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2 நாட்களாகத் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் மத்திய காஷ்மீரில் உள்ள பட்கம் மாவட்டம் சான்டினார் கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 8 வீடுகள், 10 மாட்டு கொட்டகைகள் முற்றிலும் இடிந்து விழுந்தன.
மேலும் 26 வீடுகள் கடுமையாகச் சேதம் அடைந்தன. ஆனால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. இந்நிலையில், இன்னும் 6 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
ஸ்ரீநகரில் ராஜ்பாக் பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மூடப்பட்டது. தொடர்ந்து அங்கு கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ஸ்ரீநகரில் ஜீலம் ஆறு அபாய கட்டத்தை தாண்டி பாய்கிறது. தெற்கு காஷ்மீரின் சங்காம் பகுதியிலும் ஆற்றில் தண்ணீர் அபாய கட்டத்தைத் தாண்டி செல்கிறது. ஆற்றில் வெள்ளப்பெருக்குக் காரணமாக, கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
காலை 6 மணி நிலவரப்படி சங்காம் பகுதியில் ஜீலம் ஆற்றில் தண்ணீர் அளவு 22.4 அடி (அபாய கட்டம் 21 அடி) உயரத்திற்கு சென்றது. ஸ்ரீநகரில் உள்ள ராம் முன்ஷி பாக் பகுதியில் ஜீலம் ஆற்றில் தண்ணீர் அளவு 18′.8 அடி (அபாய கட்டம் 18 அடி) உயரத்திற்கு சென்றது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதன் காரணமாக ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்கிறது. 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர். பெரியவர்கள், குழந்தைகள் சிறப்பு முகாம்களுக்கு செல்ல கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்.
ஜீலம் ஆற்றில் தண்ணீர் அளவு 23 அடியைத் தாண்டி சென்றால், மாநில அரசு கரையோரத்தில் இருக்கும் மக்களை வெளியேற்றுவதில் தீவிரமாக ஈடுபடும். தொடர்ந்து அங்கு மழை பெய்யும் என்றே வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வெள்ளம் தொடர்பாக பீதி அடைய தேவையில்லை என்று ஜம்மு காஷ்மீர் துணை முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கிடையே தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் மாநிலத்திற்கு விரைந்து உள்ளனர். மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை விடப்பட்டு உள்ளது.