கழுதைக்கு ஹால் டிக்கெட் அனுப்பிய காஷ்மீர் மாநில அதிகாரிகள்

கழுதைக்கு ஹால் டிக்கெட் அனுப்பிய காஷ்மீர் மாநில அதிகாரிகள்

காஷ்மீரில் கடந்த 2015-ம் ஆண்டு மாநில அரசு நடத்திய நுழைவுத்தேர்வு ஒன்றுக்கு பசுவுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்பட்டு இருந்தது தெரிந்ததே. இந்த விவகாரம் சமூக வலைத்தளத்தில் பயங்கரமாக கேலி செய்யப்பட்ட நிலையில் தற்போது. இந்த சம்பவத்தை போல மீண்டும் ஒரு சம்பவம் தற்போது அங்கு நிகழ்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

காஷ்மீர் மாநில அரசு சார்பில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தாசில்தார் பணிக்கான எழுத்து தேர்வு நடக்கிறது. இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால்டிக்கெட்டுகளை மாநில அரசுப்பணிகள் தேர்வாணையம் வெளியிட்டு உள்ளது. இந்த தேர்வுக்கு கழுதை ஒன்றுக்கும் ஹால்டிக்கெட் வழங்கப்பட்டு இருக்கிறது.

கழுதை ஒன்றின் படத்துடனும், ‘பழுப்பு கழுதை’ என்ற பெயருடனும் வழங்கப்பட்டுள்ள இந்த ஹால்டிக்கெட் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த விவகாரம் ஒருபுறம் வினோதமாக பார்க்கப்பட்டாலும், மறுபுறம் அதிகாரிகளின் அலட்சியத்தை மக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த தவறு நிகழ்ந்தது குறித்து கேட்பதற்காக தேர்வாணைய அதிகாரிகளை செய்தியாளர்கள் தொடர்பு கொண்ட போது, அவர்கள் இது குறித்து பதிலளிக்க மறுத்து விட்டனர்.

மாநில அரசு தேர்வுக்காக ஏற்கனவே பசுவுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்பட்டு இருந்த நிலையில், மீண்டும் கழுதைக்கு ஹால்டிக்கெட் வழங்கி இருக்கும் நடவடிக்கை காஷ்மீர் அரசு வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது

Leave a Reply