இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே வெளியுறவுச் செயலாளர்கள் மத்தியில் வரும் 25ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த இருநாடுகளும் இணைந்து திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களை கலந்துகொள்ள பாகிஸ்தான் தூதர், இந்தியாவின் அனுமதியின்றி அழைப்பு விடுத்தார். இதற்கு இந்தியா சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோடு இருநாடுகளுக்கு இடையே நடக்கவிருந்த பேச்சுவார்த்தை நிகழ்ச்சியையும் ரத்து செய்தது.
இந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தஸ்னிம் அஸ்லம் செய்தியாளர்களிடம் கூறியபோது ”காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களை சந்திப்பது இது முதல் முறையல்ல. பல ஆண்டுகளாகவே இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் இறையாண்மை மிக்க நாடு. இந்தியாவுக்கு அடிமையான நாடு அல்ல. பிரிவினைவாதத் தலைவர்களை சந்தித்ததால், இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் பாகிஸ்தான் தூதர் தலையிடுகிறது என்று அர்த்தமல்ல.
மேலும் காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒரு பகுதி அல்ல. காஷ்மீர் பிரச்னையில் சட்டப்பூர்வ உரிமை கொண்ட நாடு பாகிஸ்தான் மட்டுமே. காஷ்மீர் சர்ச்சைக்குரிய ஒரு பகுதியாகும். இது தொடர்பாக ஐ.நா. தீர்மானங்கள் நிறைய உள்ளன” என்றார்.