இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்ற தேர்தலை பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும் என ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதனால் அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலை நவம்பர் மாதம் 25ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை 5 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அங்கு சுமார் 60 ஆயிரம் மத்திய ரிசர்வ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 381 பிரிவு மத்தியப் படைகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டால் இன்னும் அதிகமான படைகள் அனுப்பி வைக்கப்படும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்த ஜம்மு காஷ்மீர் மக்கள் தேர்தலை புறக்கணிக்குமாறு ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் இரவோடு இரவாக மாநிலத்தில் முக்கிய இடங்களில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில், ‘காஷ்மீர் மக்கள் இந்த தேர்தலை புறக்கணிக்க வேண்டும்’ என்றும், ‘ஓட்டு போட வரக்கூடாது’ என்றும் இந்த எச்சரிக்கையை மீறி ஓட்டுபோட்டால் பொதுமக்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை பிரிண்ட் செய்தது மற்றும் ஒட்டியது யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை செய்து கொண்டு வருகின்றனர்.