ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து இளவரசர் மற்றும் கேத் மிடில்டன் இன்று நியூசிலாந்தில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தனர். வில்லியம்ஸ் தனது மனைவி கேத் மிடில்டனுக்கு பந்துவீச, கேத் பேட்டிங் செய்தார். அவர்களுடன் பள்ளிக்குழந்தைகளும் இணைந்து விளையாடினர்.
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் வரும் 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுவதை ஒட்டி கிரிக்கெட் போட்டியை விளம்பரப்படுத்த நியூசிலாந்து கிரிக்கெட் போர்டு அழைப்பின்பேரில் இன்று வில்லியம்ஸ் தம்பதியினர் கிரிக்கெட் விளையாடினர்.
வில்லியம்ஸ் வீசிய ஒரு பந்து புல்டாசாக கேத் மிடில்டனின் தலைக்கு நேராக வந்தது. நல்ல வேளையாக இளவரசி அதை லாவகமாக தனது பேட்டால் தடுத்தார். பின்னர் கேத் மிடில்டன் பீல்டிங் செய்ய வில்லியம்ஸ் பேட்டிங் செய்தார். அவருக்கு பள்ளி மாணவர் ஒருவர் பந்துவீசினார்.
கேத் மிடில்டன் ஹைஹீல்ஸ் அணிந்து பேட்டிங் செய்ததால் சிறிது தடுமாறினார். முன்னாள் நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் Debbie Hockley அவர்கள் கேத் மிடில்டனுக்கு எப்படி பேட்டிங் செய்வது என்று பயிற்சி கொடுத்தார். ஆனால் வில்லியம்ஸ் மிக அருமையாக பேட்டிங் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
கடைசியாக கேத் மிடில்டன் பள்ளி மாணவர் ஒருவருக்கு பந்துவீசினார். அவர் பவுலிங் செய்தது பந்தை எறிவது போல இருந்தது. அனைவரும் அவர் பந்துவீசும் அழகை வேடிக்கை பார்த்தனர்.