கதை திரைக்கதை வசனம் இயக்கம். திரைவிமர்சனம்

KTVI movieஇயக்குனர் கனவில் கோடம்பாக்கம் வந்திறங்கும் இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் அனுபவங்களை தன்னுடைய பாணியில் நகைச்சுவை மற்றும் மெல்லிய சோகம் கலந்து கூறியிருக்கிறார். கதையே இல்லாமல் திரைக்கதை மூலம் மட்டுமே கதை சொல்லி ரசிகர்களை போரடிக்காமல் தியேட்டரில் உட்கார வைத்த விதத்தில் பார்த்திபன் வெற்றி பெற்றுள்ளார் என்றே சொல்லவேண்டும்.

இயக்குனர் ஆன பின்னர்தான் திருமணம் என்ற கொள்கையுடன் இருக்கும் நாயகன் சந்தோஷ் காதலி அகிலாவின் கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்துகொள்கிறார். திருமணத்திற்கு பின்னர் வீட்டிலேயே உதவி இயக்குனர்களுடன் கதை விவாதம் நடத்தும் சந்தோஷுக்கும் அகிலாவுக்கும் இடையே சின்னஞ்சிறு சர்ச்சைகள் ஏற்பட்டு பின்னர் இயக்குனர் ஆன பிறகு நாம் ஒன்று சேர்ந்து கொள்ளலாம் என்று பேசி பிரிந்து விடுகின்றனர்.

இந்நிலையில் உதவி இயக்குனர்களின் துணையுடன் ஒரு கதையை தயார் செய்து அந்த கதையை தயாரிப்பாளரிடம் கூற செல்கிறார் சந்தோஷ். தயாரிப்பாளர் இவருடைய கதையை ஏற்றுக்கொண்டாரா? மனைவியுடன் சந்தோஷ் சேர்ந்தாரா என்பதே மீதிக்கதை.

நாயகன் நாயகியாக புதுமுகங்கள் சந்தோஷ் மற்றும் அகிலா. இருவரும் சரியான தேர்வு. தேவைப்படும் அளவுக்கு அளவாக நடிப்பை வாங்கியிருக்கிறார் பார்த்திபன். உதவி இயக்குனர்களாக வரும் தம்பி ராமைய்யா படம் முழுவதும் நகைச்சுவை வஞ்சனையில்லாமல் வழங்கியிருக்கின்றார். இடையிடையே பார்த்திபனும் இவருடன் சேர்ந்து படத்தை ஜாலியாக கொண்டு செல்கின்றனர்.

இன்றைய ரசிகர்கள் எந்த கோணத்தில் படம் பார்க்கின்றார்கள் என்பதை மிக அழகாக காட்சிகளின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் பார்த்திபன். மேலும் இந்த படத்தில் கவுரவ நடிகர்களாக ஆர்யா,விஷால், சாந்தனு, ஸ்ரீகாந்த், அமலாபால், விஜய் சேதுபதி அட்டக்கத்தி தினேஷ் ஆகியோரை சரியாக பயன்படுத்தியுள்ளார். அதுவும் ஆர்யா அமலாபால் காட்சிகள் பிரமாதம்.

இந்த படத்தில் ஐந்து இசையமைபாளர்களை பயன்படுத்தியுள்ளார். ஒவ்வொருவருக்கும் ஒரு பாடல். அனைத்து பாடல்களும் சுமார் ரகம்.

மொத்தத்தில் கதை திரைக்கதை வசனம் இயக்கம் பார்த்திபனின் திரைக்கதைக்கு கிடைத்த வெற்றி.

Leave a Reply