சாலைகள் அடைப்பு: போலீஸார் கட்டுப்பாட்டில் கதிராமங்கலம்
தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலம் கிராமத்தினர், காவல்துறையினரின் தடியடியைக் கண்டித்துக் கடையடைப்புப் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கும்பகோணம் அருகேயுள்ள கதிராமங்கலத்தில், விளைநிலங்களுக்கு இடையே ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அமைத்துள்ள எண்ணெய்க் கிணறுகளின் சில பைப் லைன்களில் திடீரெனக் கசிவு ஏற்பட்டது. கச்சா எண்ணெய் கொப்பளித்து வெளியே வந்ததால், விளைநிலங்கள் தீப்பிடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டினர். மேலும், நேற்று காலையில், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
நேற்று மாலை, அந்தப் பகுதியைப் பார்வையிட வந்த அதிகாரிகளை பொதுமக்கள் அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால், அங்கு வந்த போலீஸாருக்கும் போராட்டம் செய்யும் மக்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களை காவல்துறையினர் தடியடி நடத்திக் கலைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒன்பது பேரை காவல்துறையினர் கைதுசெய்தனர். அவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 10 வழக்குகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல்துறையினரின் நடவடிக்கைக்கு எதிராக, அவர்கள் ஒன்பது பேரும் உண்ணாவிரதம் இருந்துவருகின்றனர். கதிராமங்கலத்தில் 1,000 -க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். வெளியிலிருந்து யாரும் இந்தக் கிராமத்துக்கு வராமலிருக்கும் வகையில், சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன. காவல்துறையினரின் அடக்குமுறையைக் கண்டித்து, கிராம மக்கள் கடையடைப்பில் ஈடுபட்டுள்ளனர்.