கொல்கத்தா சிறையில் இருந்து தப்பிய ஒரு குற்றவாளியை பிடிக்க அதே சிறையில் இருக்கும் கதிரேசனிடம் ஆலோசனை கேட்கின்றனர் சிறை அதிகாரிகள். விஜய் தன்னுடைய தப்பிக்கும் அனுபவத்தின் காரணமாக தப்பித்து சென்ற கைதியை கண்டுபிடிக்க உதவிய கதிரேசன் திடீரென தப்பித்து செல்கிறார்.
கொல்கத்தாவில் இருந்து சென்னையில் உள்ள நண்பன் சதீஷின் வீட்டிற்கு வரும் கதிரேசன் பாங்காங் செல்ல முயற்சிக்கும்போது சமந்தாவின் காதல் காரணமாக பயணத்தை ஒத்தி போடுகிறார். இந்நிலையில் இன்னொரு விஜய்யான ஜீவானந்தம் விபத்தில் சிக்குவதை பார்க்கும் கைதி கதிரேசன் போலீஸிடம் இருந்து தப்பித்தவர் ஜீவானந்தம் என்று மாற்றிவிட்டு, கதிரேசனாக வலம் வருகிறார்.
இந்நிலையில் ஜீவானந்தத்திற்கு கிடைக்க வேண்டிய பரிசு மற்றும் புகழ் எல்லாம் கதிரேசனுக்கு கிடைக்கின்றது. இந்நிலையில் லயன்ஸ் கிளப் நடத்திய பாராட்டுவிழாவில் உண்மையில் ஜீவானந்தம் பட்ட கஷ்டங்களை திரையில் வீடியோவில் பார்க்கும் கதிரேசன், உண்மையாகவே மனம் திருந்தி ஜீவானந்தத்தின் கனவை நினைவாக்க பாடுபடுகிறார்.
தன்னூற்று என்ற கிராமத்தில் விவசாய நிலங்களை கார்ப்பரேட் கம்பெனி ஆக்கிரமிப்பதை ஜீவானந்தமாக மாறிய கதிரேசன் தடுத்து நிறுத்துகிறார் என்பதுதான் கதை.
ஜீவானந்தம், கதிரேசன் என்ற இரண்டு கேரக்டர்களில் விஜய் நடித்துள்ளார். ஜீவானந்தம் கேரக்டர் மொத்தமே சுமார் 15 நிமிடங்கள் மட்டும் வருவதால் அந்த கேரக்டரை நாம் விட்டுவிடலாம். கதிரேசனாக வரும் விஜய்யின் நடிப்பு ஓகே. கார்ப்பரேட் முதலாளிகளிடம் சிக்குண்ட விவசாயிகளின் கண்ணீர் கதையை கேட்டு மனம் கலங்குவது, சமந்தாவுடன் காதல் டூயட், சதீஷுடன் காமெடி என விஜய் தன்னுடைய வேலையை மிகச்சரியாக செய்துள்ளார்.
இந்த படத்திற்கு தேவையே இல்லாத ஒர் கேரக்டர் சமந்தா. படத்தில் இவருக்கு உருப்படியாக ஒருவேளையும் இல்லை. பாட்டும் சரியாக அமையவில்லை என்பதால் சமந்தாவிற்கு இந்த படத்தின் வெற்றியில் ஒருதுளி கூட பங்கில்லை என்று கூறலாம்.
சதீஷ் காமெடி பண்ணுகிறாரா? குணச்ச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தியுள்ளாரா? என்பதை அவர்தான் விளக்கம்வேண்டும்.
பாடல்கள் பொருத்தமில்லாத இடத்தில் வருகிறது. ஒரு நல்ல விறுவிறுப்பான திரைக்கதையில் பாடல்கள் இடையிடையே வந்து எரிச்சலூட்டுகின்றன. செல்பி புள்ள பாடலைத்தவிர படத்தில் வேறு எந்த பாடலும் எடுபடவில்லை. அனிருத்தின் பின்னணி இசை படுமோசம். முருகதாஸ் சார், கண்டிப்பாக அடுத்த படத்திற்கு நல்ல இசையமைப்பாளரை போடுங்கள்.
படத்தின் உண்மையான ஹீரோ ஏ.ஆர்.முருகதாஸ்தான். விறுவிறுப்பான திரைக்கதை. விஜய்யை கொல்ல வரும் மீடியா பெண்கள், காய்ன் சண்டை, ஒட்டுமொத்த மீடியாவையும் தங்கள் பக்கம் திருப்ப குழாய்க்குள் உட்கார்ந்து கொண்டு செய்யும் அறப்போராட்டம், கூர்மையான வசனங்கள், கம்யூனிசியத்தை ஒரே வரியில் அழகாக கூறும் வசனம், மூன்று நாள் தண்ணீர் இல்லையென்றால் சென்னை மக்கள் படும் திண்டாட்டம், விஜய் மல்லையா முதல் 2ஜி வரை பெரிய மனிதர்களை நேரடியாக தாக்க்கும் வசனங்கள் என படம் முழுவதும் ஏ.ஆர்.முருகதாஸ்தான் தெரிகிறார். வாழ்த்துக்கள் முருகதாஸ்.
மொத்தத்தில் ‘கத்தி’ துப்பாக்கியை விட கூர்மையானதுதான்.