ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த தீபாவளி தினத்தில் வெளியான ‘கத்தி’ திரைப்படத்தின் கதை என்னுடையது என்று உரிமை கொண்டாடி, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மீஞ்சூர் கோபிக்கு நேற்று நீதிமன்றம் ரூ.1000 அபராதம் விதித்து கண்டித்தது.
சென்னை நகர நீதிமன்றத்தில் நேற்று கோபியின் மனு விசாரணைக்கு வந்தபோது அவரது தரப்பில் இருந்து புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் இந்த வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக மீஞ்சூர் கோபி தெரிவித்திருந்தார். இதனால் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததாக கோபிக்கு நீதிமன்றம் ரூ.1000 அபராதம் விதித்தது.
ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் தன்னுடைய நியாயத்தை எடுத்து வைத்து பெரும்பாலானவர்களின் ஆதரவை பெற்றிருந்த கோபி திடீரென வழக்கை வாபஸ் வாங்கியது ஏன் என்று பெரிய புதிராக இருப்பதாக பலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்னும் சில ஆதாரங்களை திரட்டிய பின்னர் வலுவாக மீண்டும் இந்த வழக்கை மீஞ்சுர் கோபி தாக்கல் செய்ய உள்ளதாக ஒருசில ஊடகங்கள் தெரிவித்தாலும் பல சமூக வலைத்தள பயனாளிகள் மீஞ்சூர் கோபி விலை போனதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.