இன்று பெரும்பாலும் வீட்டைக் கட்டி கொடுக்கும் பொறுப்பைக் கட்டுமான நிறுவனங்களிடமே பொதுமக்கள் ஒப்படைக் கிறார்கள். இதுவே அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்குவதாக இருந்தாலும் ஏதோ ஒரு கட்டுமான நிறுவனம்தான் அந்தப் பணியை மேற்கொள்கிறது.
அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு வாங்குபவரும் கட்டுமான நிறுவனமும் கட்டுமான ஒப்பந்தம் போட்டுக் கொள்வது வழக்கம். அந்த ஒப்பந்தத்தில் என்னென்ன சொல்லப்பட்டிருக்கும்?
அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்குபவர்களுக்கும் கட்டுமான நிறுவனத்துக்கும் இடையே கட்டுமான ஒப்பந்தம் மிகமிக அவசியம். ஒப்பந்தம் செய்து கொள்வது இரு தரப்புக்குமே நல்லது.
ஒப்பந்தத்தில் இடத்தின் அளவு, வீடு கட்டி முடிக்கப்படும் காலம், வீட்டுக்கான மதிப்பு, வரவேற்பறை, படுக்கையறை, சமையலறை, கழிவறை, குளியலறை எப்படி அமைக்கப்படும் உள்படப் பல்வேறு விஷயங்கள் ஒப்பந்தத்தில் இடம்பெறும்.
சில ஆண்டுகள் வரை கட்டுமான ஒப்பந்தங்களைப் பதிவுசெய்யாமலேயே வீடு கட்டி முடிக்கப்பட்டதும் உண்டு. ஆனால், இப்போது அப்படியில்லை. கட்டுமான ஒப்பந்த ஆவணங்களைப் பதிவுசெய்வது கட்டாயமாக்கப்பட்டுவிட்டது.
இந்தப் பதிவுக்குக் கட்டுமானத்துக்கு ஆகும் செலவில் ஒரு சதவீதம் முத்திரைத் தீர்வையாக வசூலிக்கப்படுகிறது.
பதிவின்போது கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் புகைப்படமும், வீட்டை வாங்குபவரின் புகைப்படமும் கைரேகையும் இடம்பெறும் என்பதால் அந்தப் பதிவு முக்கியத்துவமும் பெறுகிறது. ஒப்பந்தத்தில் இன்னும் என்னென்ன இடம் பெற்றிருக்கும்?
வீட்டைச் சுற்றி உள்ள நான்கு எல்லைகள், வீடு அமைய உள்ள அளவு, வீடு எங்கு அமைந்துள்ளது, எந்தப் பதிவு மாவட்டத்தின் கீழ் வருகிறது போன்ற ஷரத்துகள் ஒப்பந்தத்தில் இடம் பெற்றிருக்கும்.
எந்த உள்ளாட்சி அமைப்பில் இருந்து கட்டிட அனுமதி பெறப்பட்டது, அதற்கான அனுமதி எண், திட்டத்துக்கான அங்கீகாரம், அது வழங்கப்பட்ட நாள், கட்டப்படும் கட்டிடம் எந்தப் பெயரால் அழைக்கப்படும் போன்ற விவரங்கள் ஒப்பந்தத்தில் இடம் பெறும்.
கட்டிடம் அமைந் துள்ள இடத்தின் முகவரி. மனை எண், ஃப்ளாட் எண், எந்தத் தளம், கதவு எண், தெருவின் பெயர், அந்த இடத்தின் பெயர் ஆகியவையும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
ஒப்பந்தத்தில் முக்கியமாக இடம் பெறும் விஷயம் காலக்கெடு. வீட்டை எத்தனை மாதத்தில் கட்டி ஒப்படைக்க வேண்டும் என்ற ஒப்பந்தம் இடம்பெறும். தாமதம் ஏற்பட்டால் கட்டுமான நிறுவனம் பொறுப்பேற்க வேண்டி வரும். தாமதத்துக்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டும் என்பதால் இது வீடு வாங்குபவர்களுக்கு முக்கியமான ஒரு ஷரத்து.
வீட்டின் மொத்த மதிப்பு எவ்வளவு? தரப்பட்ட முன்பணம், எந்தெந்த நிலைகளில் மீதிப் பணத்தைத் தர வேண்டும் போன்ற விவரங்களும் இடம் பெற்றிருக்கும். மொத்தப் பணமும் தந்தபிறகு வீடு எப்போது ஒப்படைக்கப்படும் என்பதையும் கட்டாயம் ஒப்பந்தத்தில் சேர்த்துவிட வேண்டும்.
வீடு கட்டி முடிக்கப்பட்டபிறகு ஒப்பந்தப்படி வீட்டை வாங்கவில்லை என்றாலோ அல்லது பணம் தருவதில் காலதாமதம் ஆனாலோ வீடு வாங்குபவருக்குப் பிரச்சினை ஏற்படும். காலதாமதத்துக்குக் குறிப்பிட்ட சதவிகிதம் வட்டி தரவேண்டும் என்ற ஒரு ஷரத்தைச் சேர்த்திருப்பார்கள். இது கட்டுமான நிறுவனத்தின் நலனுக்கானது.
மொத்தப் பணத்தையும் செலுத்திய பிறகு கட்டுமான நிறுவனம் வீட்டைக் கட்டி முடிக்கத் தாமதம் ஏற்பட்டால், தாமதத்துக்கு நஷ்டயீடு கோரும் ஷரத்தைச் சேர்க்கச் சொல்லி வீடு வாங்குபர் கோர வேண்டும்.
குடிநீர் இணைப்பு, கழிவு நீர் இணைப்பு, மின் இணைப்பு போன்ற அரசு தரப்பில் செய்து தரப்பட வேண்டிய இணைப்புகள் தாமதமானால் ஒப்பந்தம் கட்டுமான ஒப்பந்தத்தைக் கட்டுப்படுத்தாது என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.
சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகளைச் செலுத்துவது யார் என்ற ஷரத்தும் இடம் பெறும்.
அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் தனி மின்சார மீட்டர்களைப் பொருத்த வேண்டியது கட்டுமான நிறுவனத்தின் பொறுப்பு. எனவே அதைப் பற்றிய ஷரத்தும் ஒப்பந்தத்தில் இடம் பெற வேண்டும்.
கார் பார்க்கிங் உண்டு என்றால் அந்த இடத்தின் அளவையும் ஒப்பந்தத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
வீட்டை எத்தனை ஆண்டுகளுக்குக் கட்டுமான நிறுவனம் பராமரிக்கும் என்ற ஷரத்தைப் பேசி இடம் பெறச் செய்யலாம்.
வீட்டைக் கட்டப் பயன்படுத்தப்படும் கட்டுமானப் பொருட்கள், உள்ளமைப்பு வேலைகள், மின்சார ஒயர்கள், ஜன்னல், கதவு நிலை போன்றவை எந்த வகை மரத்தால் செய்யப்படும் என்கிற விவரங்களும் இடம் பெற்றிருக்கும்.
டைல்ஸ், மார்பிள், மொட்டைமாடி போன்றவற்றின் விவரங்களும் ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருக்கும். அப்படி இல்லையென்றால் அதையும் சேர்க்கச் சொல்லிக் கோரலாம்.
ஒரு வேளை கட்டி முடிக்கப்பட்ட வீட்டை வாங்கினால், மேற்சொன்னவற்றில் சில ஷரத்துகள் தவிர்த்து மற்ற ஷரத்துகள் ஒப்பந்தத்தில் இடம் பெற்றிருக்கும்.
வாழ் நாள் முழுவதும் வசிப்பதற்காக வாங்கப்போகும் வீட்டை, இப்படி ஒப்பந்தம் போட்டு வாங்குவதே புத்திசாலித்தனம்.