டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உள்ளது. முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால், ராம்லீலா மைதானத்தில் 26ஆம் தேதி நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பதவி ஏற்றுக்கொள்கிறார்.
டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் அங்கு ஆட்சி அமைப்பதில் கடந்த 2 வாரங்களுக்கு மேல் சிக்கல் நீடித்தது.
தனிப்பெரும் கட்சியாக விளங்கிய பாரதீய ஜனதா பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்க முன்வரவில்லை.
ஆம் ஆத்மி கட்சிக்கு 28 இடங்களும், காங்கிரசுக்கு 8 இடங்களும் கிடைத்தன. டெல்லியில் ஆட்சி அமைக்க 36 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. ஆம் ஆத்மி கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க தயார் என்று காங்கிரஸ் அறிவித்தது. ஆம் ஆத்மி கட்சி தங்கள் நிபந்தனைகளுக்கு பதில் அளித்தால் காங்கிரஸ் ஆதரவை ஏற்று ஆட்சி அமைக்க தயார் என்றது.
இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் ஆதரவுடன், பொதுமக்களின் கருத்தையும் கேட்டு ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க ஒப்புக் கொண்டது. கட்சியின் அரசியல் விவகார குழு நேற்று காலை கூடி, மக்களின் பெரும்பான்மை கருத்தை ஏற்று ஆட்சி அமைப்பது என்று முடிவு செய்தது.
கூட்ட முடிவில் அரவிந்த் கெஜ்ரிவால் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘தங்கள் கட்சி டெல்லி முழுவதும் 280 பொதுக்கூட்டங்களை நடத்தியது. இதில் 257 கூட்டங்களில் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க மக்கள் ஆதரவளித்தனர். எஞ்சிய கூட்டங்களில் ஆட்சி அமைக்க கூடாது என்று கருத்து தெரிவித்தனர்’’ என்றார்.
அதன்படி கட்சியின் அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று கவர்னர் நஜீப் ஜங்கை சந்தித்து அரசு அமைப்பதற்கு அழைக்கக்கோரும் கடிதத்தை வழங்கினார். கடிதத்தை பெற்றுக்கொண்ட கவர்னர், ஆட்சி அமைப்பதற்கான தனது முன்மொழிவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பேன். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது கருத்தை தெரிவித்த பின்னர் பதவி ஏற்பு விழா தேதி மற்றும் நேரம் முடிவு செய்யப்படும் என்று கெஜ்ரிவாலிடம் கூறினார்.
கெஜ்ரிவால் முதல்வராக பதவி ஏற்கும் விழா 26ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்படுகிறது.
இதன்மூலம் 45 வயதான அரவிந்த் கெஜ்ரிவால் தனது கட்சி சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறார். தனது பதவி ஏற்பு விழாவை பொதுமக்கள் விழாவாக ராம்லீலா மைதானத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சமூக ஆர்வலர் அன்னாஹசாரே ஜன்லோக்பால் மசோதாவை வலியுறுத்தி இந்த மைதானத்தில் தான் உண்ணாவிரதம் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அன்னாஹசாரேவின் ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலும் தீவிரமாக செயல்பட்டு வந்தார்.
தலைநகர் டெல்லியில் இதுதான் முதல் சிறுபான்மை ஆட்சியாக இருக்கும். எனவே, ‘‘நான் பதவி ஏற்றதும் சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வருவேன். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்’’ என்று கெஜ்ரிவால் கூறினார்.