கேரள பட்ஜெட் முன்கூட்டியே ஃபேஸ்புக்கில் வெளியானதா? பெரும் பரபரப்பு
கேரள மாநில சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பொது பட்ஜெட் ஃபேஸ்புக்கில் முன்கூட்டியே வெளியானது எப்படி? என எதிர்க்கட்சிகள் கிடுக்கிப்பிடி கேள்வி கேட்டு சட்டமன்றத்தையே அதிர வைத்தன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேரள மாநில சட்டசபையில் 2017-18ஆம் ஆண்டிற்கான பொது பட்ஜெட் இன்று காலை தாக்கல் செய்யப்பட்டது. கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அப்போது, கேரள அரசின் பட்ஜெட் நகல் ஏற்கெனவே ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியாகிவிட்டதாகவும் இதனால் அதன் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளதாகவும் கேரள மாநில எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி அமளியில் ஈடுபட்டனர். இதனால் சட்டப்பேரவை சில நிமிடங்கள் ஸ்தம்பித்து போனது. பின்னர் பட்ஜெட் தாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவை வளாகத்திற்கு வெளியே எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா இணையத்தில் வெளியான பட்ஜெட்டை வாசித்துக் காட்டினார். மாநில அரசின் பட்ஜெட் சமூக வலைத்தளங்களில் முன்கூட்டியே வெளியானதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு, பட்ஜெட் பிரதிகள் களவு போயிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது