கேரளாவில் மதுவிலக்கை அமல்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் முதல்வர் உம்மன்சாண்டி நேற்று முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து மதுபார்களையும் மூட உத்தரவிட்டுள்ளார். முதல்வரின் உத்தரவை தொடர்ந்து நேற்று நள்ளிரவுடன் கேரளாவில் உள்ள 312 மதுபான பார்களும் அதிரடியாக மூடப்பட்டன.
ஓணம் பண்டிகையை ஒட்டி கேரள மதுபான விற்பனை நிலையங்களில் அதிகளவு ஸ்டாக் வைக்கப்பட்டிருந்தது. தற்போது திடீரென மதுபான பார்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளதால் மதுபானங்களை விரைவில் காலி செய்ய மதுபான விற்பனை நிலையங்கள் முடிவு செய்துள்ளன. இதற்காக குடிமகன்களுக்கு சிறப்பு சலுகை மற்றும் அதிரடி தள்ளுபடி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு பெக் மதுபானம் வாங்கினால், 3 பெக் இலவசம் எனவும், ஒரு பீர் வாங்கினால், இன்னொரு பீர் இலவசம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கேரளாவிலுள்ள அனைத்து மது நிலையங்களிலும் கூட்டம் அலைமோதுகிறது
இந்நிலையில் கேரளாவில் உள்ள பார் உரிமையாளர்களின் அவசர கூட்டம் நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. முதல்வரின் இந்த திடீர் உத்தரவால் தங்களுக்கு பெரும் நஷ்டம் உண்டாகியுள்ளது என்றும், எனவே பார்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுசம்பந்தமாக நீதிமன்றத்தில் அவர்கள் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கேரள முதல்வரின் அதிரடி நடவடிக்கைக்கு பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் முதல்வரின் அதிரடி நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.