மாட்டிறைச்சி தடைக்கு எதிராக புதிய சட்டம்: கேரள அரசு அதிரடி முடிவு
சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த ‘மாட்டிறைச்சி தடை சட்டம் இந்தியா முழுவதிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடு ரோட்டில் பலர் மாட்டுக்கறியை சமைத்து உண்கின்றனர். இதனால் வழக்கத்தைவிட அதிகமாக மாட்டிறைச்சி பொதுமக்களால் எடுத்து கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மத்திய அரசின் மாட்டிறைச்சி தடைக்கு எதிராக புதிய சட்டம் ஒன்றை இயற்ற கேரள அரசு பரிசீலித்து வருவதாக, அம்மாநில உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.டி.ஜலீல் தெரிவித்துள்ளார். மேலும், ‘’இந்த விவகாரம் மாநில, மத்திய அரசுகளின் நலன் என்பதை கடந்து, மக்களின் அடிப்படை உரிமையோடு தொடர்புடையது என்பதால், விரைவில் புதிய சட்டம் கொண்டுவருவோம் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, இந்த சட்டத்தை கேரளாவிலும், புதுச்சேரியிலும் அமல்படுத்த முடியாது என்ற அந்தந்த மாநில முதல்வர்கள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவின் முக்கிய உணவே மாட்டுக்கறி என்ற நிலையில் இந்த சட்டத்தை அங்கு அமல்படுத்துவது என்பது சாத்தியமற்றது என்று கூறப்படுகிறது.