கேரளாவிற்காக பல பதக்கங்களை வாங்கியவர் முகமது அலி. கேரள அமைச்சரின் கருத்தால் சர்ச்சை
உலக புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் முகமது அலி நேற்று அமெரிக்காவில் மரணம் அடைந்ததால் உலகில் உள்ள அனைத்து விளையாட்டு வீரர்களும் அவருடைய மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் கேரள விளையாட்டுத்துறை அமைச்சர் இ.பி.ஜெயராஜன் முகமது அலி, கேரளாவிற்காக பல்வேறு போட்டிகளில் விளையாடி வெற்றியை குவித்து அம்மாநிலத்திற்கு புகழ் சேர்த்தவர் என சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஹரிசோனா மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக்கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த முகமது அலி நேற்று சிகிச்சையின் பலனின்றி மரணம் அடைந்தார். அவரது மறைவு விளையாட்டுத்துறைக்கு பேரிழப்பாக கருதப்படும் நிலையில் கேரளாவை சேர்ந்த தனியார் ஊடகம் ஒன்று அம்மாநிலத்தில் புதியதாக விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுபேற்ற ஜெயராஜனிடம் முகமது அலி மறைவு குறித்து கருத்தை கேட்டது.
நேரடி ஒளிபரப்பில் வெளிவந்த இந்த பேட்டியில் அமைச்சர் ஜெயராஜன் கூறியதாவது, “அமெரிக்காவில் முகமது அலி உயிரிழந்தது குறித்து கேள்விப்பட்டேன். விளையாட்டுத்துறையில் கேரளாவை சேர்ந்த மிக பிரபலமான வீரர் முகமது அலி. விளையாட்டுத்துறையில் பல பதக்கங்களை வென்று கேரளாவின் புகழை வானளவு உயர்த்தியவர் முகமது அலி. தங்கப் பதக்கங்கள் வென்று கேரளாவை சர்வதேச அளவில் பிரபலபடுத்தியவர் முகமது அலி. அவருடைய இழப்பு விளையாட்டு உலகிற்கும், கேரளாவிற்கும் பெரிய இழப்பு” என்று கூறியுள்ளார்.
விளையாட்டு துறை குறித்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் அந்த துறைக்கு அமைச்சராக இருப்பது கேரள மாநிலத்திற்கே ஒரு அவமானம் என்று சமூக வலைத்தளங்களில் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
Chennai Today News: Kerala’s sports minister thinks Muhammed Ali is Mallu, gets trolled