காலிஸ்தான் தீவிரவாதி தேவேந்திரபால் சிங் புல்லரின் தூக்குதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க கோரி அவருடைய மனைவி உச்சநீதிமன்றத்தில் சமீபத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. அவருடைய மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி புல்லருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டார்.
1993ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த ஒரு குண்டுவெடிப்பு வழக்கில் கைதான புல்லருக்கு கடந்த 2001 ஆம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இவருடைய தூக்கு தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்ற பலமுறை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி ஆனது. சமீபத்தில் சில வழக்குகளில், கருணைமனு காலதாமதத்தால் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதால், இந்த வழக்கிற்கும் அந்த காரணங்கள் பொருந்துமா? என ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது.
மேலும் புல்லரின் தற்போதைய மனநிலை குறித்தும் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவரின் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.