சிறுநீரகம் (Kidney)நமது உயிர்வாழ்க்கைகுத் தேவையான முக்கியமான உறுப்பாகும்
இதன் தொழில்கள் ,
1.குருதியில் இருந்து கழிவுகளை வெளியேற்றுதல்
2.உடலில் நீரின் அளவை சரியான அளவில் வைத்திருத்தல்
3.உடலில் சோடியம் பொற்றாசியம் உட்பட்ட பல மூலகங்களை கட்டுப் பாட்டில் வைத்திருத்தல்
4.குருதியில் உள்ள செங்குருதிக் கலங்களின் உற்பத்தியை தூண்டும் ஹார்மோனை உற்பத்தி செய்தல்
5.குருதி அமுக்கத்தை கட்டுப் படுத்தல்
இவ்வாறு பல முக்கியமான செயற்பாடுகளை செய்யும் சிறுநீரகம் பல காரணங்களால் செயல் இழந்து போகலாம். இந்த செயல் இழப்பானது சடுதியானதாக (Acute renal failure) இருக்கலாம் அல்லது நாட்பட்டதாக(Chronic renal failure) இருக்கலாம்.
சடுதியாக ஏற்படும் சிறுநீரக செயல் இழப்பு(acute renal failure)
இதில் திடீரென சிறுநீரகத்தின் செயற்பாடு குறையும்.
இதை ஏற்படுத்தக் கூடிய காரணிகள்
1.சடுதியாக குருதியின் அளவு குறைதல் -குருதிப் பெருக்குக் காரணமாக
2.உடலில் இருந்து அதிகளவான நீர் வெளியேறுதல்-வயிற்றோட்டம் வாந்தி பேதி போன்றவை மூலம்
3.சிறுநீரகத்திற்கு இரத்தம் கொண்டு போகும் குழாய்களில் ஏற்படும் அடைப்புக்கள்
4.உடலில் பரவலான கிருமித் தொற்று(sepsis)
5.சிலவகை மருந்துகள் – பொதுவாக வலிநிவாரநிகளாக கொடுக்கப்படும்
NSAID எனப்படும் வகை மாத்திரைகள் .
6.சிலவகை நஞ்சுகளால் ஏற்படலாம் (நஞ்சு அருந்தியவர்களில்)
7.சிலவகை பாம்புக் கடி
8.எலிக்காய்ச்சல்
இப்படி ஏராளமான காரணங்களால் சிறுநீரகத்தின் செயற்பாடு சடுதியாக குறையலாம்.
இவ்வாறு சடுதியாக குறையும் சிறுநீரகச் செயற்பாடு அநேகமான சந்தர்ப்பங்களில் தற்காலிகமாதுதான்(மாறாக நாட்பட்ட சிறுநீரக செயல் இழப்பு நிரந்தரமானது)சடுதியான சிறுநீரக செயல் இழப்பை ஏற்படுத்திய காரணி சரியாக்கப் பட்டால் மீண்டும் சிறுநீரகம் தன் செயற்பாட்டை பெற்று சாதாரண நிலையை அடையலாம்.
இதனால் ஏற்படும் அறிகுறிகளை ஒருவர் அறிவதற்கு முன்னமே வைத்தியரினால் அது அடையாளம்கண்டு பிடிக்கப்பட்டு விடும். ஆனாலும அந்த நேரத்தில் சிறுநீரக செயல் இழப்பை ஏற்படுத்தும் காரணிகளின் அறிகுறிகள் இருக்கும்.உதாரணமாக எலிக்காய்ச்சல், பாம்புக்கடி அதிகமான வாந்தி ,குருதிப் பெருக்கு இவ்வாறான பிரச்சினைகள் உங்களுக்கு இருக்கும்.அது தவீர சிறுநீரக செயல் இழப்பு ஏற்படுவதை தொடர்ந்து உடம்பில் ஏற்படுகின்ற மாற்றங்களின்அறிகுறிகள் வெளிக்காட்டப் படும்.அவை சிலவேளைகளில் பாரதூரமானவை.
சிறுநீரக செயழ் இழப்பினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள்
1.குருதியில் நச்சுப் பதார்த்தங்கள் அதிகரித்தல்
2.பொட்டாசியம் ,சோடியம் போன்றவற்றில் கட்டுப்பாடு இல்லாமல் போதல்
3.உடலில் அளவுக்கதிகமாக நீர் தேங்குதல். என்பவை முக்கியமான மாற்றங்கள். நச்சுப் பதார்த்தங்கள் மூலையில் பாதிப்பை ஏற்படுத்தலாம். சோடியம் ,பொட்டாசியம் என்பவற்றின் கட்டுப் பாடுகள் இல்லாமல் போவதால் பல செயற்பாடுகள் பாதிக்கப்படும். குறிப்பாக பொட்டாசியம் அதிகரிப்பதால் இதயம் செயல் இழக்கலாம்.
மருத்துவம்: சடுதியான சிறுநீரகச் செயழ் இழப்பிற்கு மருத்துவ முறையில் முக்கியமாக 3 விடயங்கள்கருத்தில் கொள்ளப்படும்.
1.சிறுநீரக செயழ் இழப்பை ஏற்படுத்திய காரணியை நிவர்த்தி செய்தல்
2.சிறுநீரக பாதிப்பால் உடலில் ஏற்பட்ட பாதிப்புக்களை நிவர்த்தி செய்தல்
3.தொடர்ந்து சிறுநீரகம் மீண்டும் பழைய நிலைக்கு வரும் வரை வரக்கூடிய பாதிப்புக்களுக்கு முன் ஏற்பாடு எடுத்தல்.
அநேகமான சடுதியான சிறுநீரக செயழ் இழப்புக்கள் அதற்கான காரணியை நிவர்த்தி செய்யும் போது சரியாகி மீண்டும் பழைய நிலையை அடைந்துவிடும். ஆனால் அது பழைய நிலையை அடையும் வரை போதிய மருத்துவக் கண்காணிப்பு வழங்கப்பட வேண்டும்.
உதாரணத்திற்கு பொட்டாசியம் குருதியில் அதிகரித்தால் அதை குறைத்து சரியான அளவிலே வைத்திருக்க மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும்.குருதியில் நச்சுப் பதார்த்தங்கள் அதிகரித்தால் அவற்றை டயாலிசிஸ் (Dialysis)எனப்படும் முறை மூலம் நீக்க வேண்டும். இவ்வாறு தற்காலிக கண்காணிப்புக்கள் சிறுநீரகம் மீண்டும் பழைய நிலையை அடையும் வரை வழங்கப் பட வேண்டும்.