சிறுநீரகத்தில் உள்ள அதிகப் படியான தாதுஉப்புக்கள் மற்றும் அமில உப்புக்கள் கற்களை உருவாக்குகின்றன. நோய்த்தொற்று, நீர்ச்சத்துக் குறைவு, தவறான உணவுப் பழக்கம் உள்ளிட்ட பல காரணங்களால் சிறுநீரகக் கற்கள் ஏற்படுகின்றன. சிறுநீரகம், சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர்ப்பைக்குச் செல்லும் குழாய், சிறுநீர்ப்பை என சிறுநீரக மண்டலத்தில் எந்தப் பகுதியிலும் கற்கள் ஏற்படலாம்.
அறிகுறிகள்
கல் உருவாகும்போதே அறிகுறிகள் வெளிப்படுவது இல்லை. பெரும்பாலும் கற்கள் பெரிதாகி, சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர் செல்லும் குழாய்க்கு கல் நகரும்போது அல்லது அடைப்பை ஏற்படுத்தும்போது அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது.
முதுகில், விலா எலும்புக்குக் கீழ் பகுதியில் கடுமையான வலி
வலி அடிவயிற்றுக்குப் பரவுதல் மற்றும் அதிகரித்தல்
சிறுநீர் கழிக்கும்போது வலி, நீர்க்கடுப்பு
இளஞ்சிவப்பு, கருஞ்சிவப்பு, மாநிறத்தில் சிறுநீர் வெளியேறுதல்
குமட்டல் மற்றும் வாந்தி
சிறுநீர் கழிப்பதில் அவசரம்
வழக்கத்தைவிட அடிக்கடி சிறுநீர் கழித்தல்
நோய்த் தொற்றால் ஏற்படும் காய்ச்சல்
கல் ஏன் ஏற்படுகிறது?
இதனால்தான் ஏற்படுகிறது என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை என்றாலும், பல்வேறு காரணிகள் சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன. கால்சியம், ஆக்சலேட் மற்றும் யூரிக் அமிலம் போன்ற கல்படிமங்களை ஏற்படுத்தும் தாது உப்புக்கள் சிறுநீரில் அதிகமாக இருந்தால், கற்கள் ஏற்படும்.
கால்சியம் கற்கள்: பெரும்பான்மையான சிறுநீரகக் கற்கள் கால்சியம் வகையைச் சேர்ந்தவை. கால்சியம் ஆக்சலேட்டாக இவை இருக்கின்றன. ஆக்சலேட் என்பது காய்கறிகள், பழங்கள், கொட்டை வகைகள், சாக்லேட்களில் காணப்படுகிறது. தவிர, கல்லீரலும் ஆக்சலேட்டை உற்பத்தி செய்கிறது. கால்சியத்துடன் இது வினைபுரிந்து கால்சியம் ஆக்சலேட் கல்லாக சிறுநீரகத்தில் படிகிறது. சில நேரங்களில் கால்சியம் பாஸ்பேட் கல்லும் உருவாகலாம்.
ஸ்ட்ரூவைட் கற்கள்: சிறுநீரகப் பாதையில் ஏற்படும் நோய்த்தொற்று காரணமாக ஏற்படுகிறது. இந்த கல் மிக விரைவாகத் தோன்றி, மிக வேகமாகப் பெரிதாகும்.
சிஸ்டின் கற்கள்: சிலருக்கு மரபியல்ரீதியாக, சிறுநீரகம் சில வகையான அமினோ அமிலங்களை வெளியேற்றும் பாதிப்பு இருக்கும். இதனால் சிஸ்டின் வகை கல் உருவாகிறது.
யூரிக் அமில கற்கள்: அதிக அளவில் நீர் அருந்தாதவர்களுக்கும், நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை எடுத்துக்கொள்ளாதவர்களுக்கும், குறைந்த அளவில் நீர் வெளியேறுபவர்களுக்கும், அதிகப் புரதச்சத்து உள்ள உணவுகளை உட்கொள்பவர்களுக்கும், கவுட் என்ற நோய் உள்ளவர்களுக்கும் ஏற்படுகிறது. சில மரபியல் காரணிகளும் யூரிக் அமிலக் கற்கள் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கின்றன.
யாருக்கு வர வாய்ப்பு உள்ளது?
குடும்பத்தில் சிறுநீரகக் கல் பாதிப்பு வந்தவர்கள் 40 வயதைக் கடந்தவர்கள்
பெண்களைக் காட்டிலும் ஆண்கள்
போதுமான அளவு நீர் அருந்தாதவர்கள், நீர்ச்சத்து குறைவாக உள்ளவர்கள்
அதிகப் புரதம், சோடியம் மற்றும் சர்க்கரை உள்ள உணவுகளை உண்பவர்கள்
உடல் பருமன் உள்ளவர்கள்
செரிமானக் குறைபாடு உள்ளவர்கள் (கால்சியம் மற்றும் நீர்ச்சத்தைக் கிரகிக்க முடியாத நிலை)
சுய மருத்துவம், சில வகையான மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள்
சிறுநீரக நோய்த் தொற்று பாதிப்பு உள்ளவர்கள்
தவிர்க்க…
தினமும் இரண்டு முதல் இரண்டரை லிட்டர் வரை தண்ணீர் அருந்த வேண்டும்.
ஆக்சலேட் அதிகம் உள்ள பால், பால்சார்ந்த பொருட்கள், பசலைக்கீரை, முட்டைகோஸ், கிழங்கு வகைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
கோலா உள்ளிட்ட குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டும்.
உப்பைக் குறைவாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இறைச்சி உணவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். (அதிக அளவில் புரதம் உள்ளது) இதற்குப் பதிலாகக் காய்கறி மூலம் கிடைக்கும் புரதத்தை எடுத்துக்கொள்ளலாம்.
கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், கால்சியம் சத்து மாத்திரைகள் எடுக்கும்போது கவனத்துடன் இருக்க வேண்டும்.