ராம்கோபால் வர்மாவின் ‘கில்லிங் வீரப்பன்’ படத்திற்கு நீதிமன்றம் தடை
பிரபல தெலுங்கு பட இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கியுள்ள ‘கில்லிங் வீரப்பன்’ என்ற படத்திற்கு பெங்களூர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
0
வீரப்பனின் வாழ்க்கையை மையமாக வைத்து பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், தெலுங்கு என ஐந்து மொழிகளில் ‘கில்லிங் வீரப்பன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் வீரப்பனை பிடிக்கும் அதிகாரியாக கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடித்துள்ளார். இவர் வீரப்பனால் கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமாரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி சமீபத்தில் பெங்களூர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதில் தனது கணவர் வீரப்பனின் கதையை இந்தியில் மட்டுமே படமாக்க தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும், ஆனால் இயக்குனர் ராம்கோபால் வர்மா தமிழ் உள்பட 5 மொழிகளில் படமாக்கி ஒப்பந்தத்தை மீறிவிட்டதாகவும் எனவே இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த மனு இன்று பெங்களூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி வரும் டிசம்பர் 17 வரை இந்த படத்திற்கு தடை விதிப்பதாகவும், இந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய ராம்கோபால் வர்மாவுக்கு சம்மன் அனுப்பவும் உத்தரவிட்டார்.