டுவிட்டரில் சர்ச்சைக்குரிய கருத்து. கிரண்பேடி மன்னிப்பு கேட்க கோரிக்கை
இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியான கிரண்பேடி சமீபத்தில் புதுவை கவர்னராக பதவியேற்று பல அதிரடி நடவடிக்கைகள் மூலம் புதுவையை தூய்மையான மாநிலமாக மாற்றி வருகிறார். ஒவ்வொரு வார இறுதியிலும் அவரே நேரில் துப்புரவு தொழிலாளர்களுடன் கைகோர்த்து ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் அவர் தனது டுவிட்டரில் நேற்று ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவர் தனது டுவிட்டரில் ,”பழங்குடியின முன்னாள் குற்றவாளிகள் மிகவும் கொடூரமானவர்கள். குற்றத் தொழிலில் கைதேர்ந்தவர்கள். அவர்கள் எப்போதாவதுதான் தண்டிக்கப்படுகிறார்கள்” என்று கூறியுள்ளார்.
பழங்குடி இன மக்களை அவர் அவமரியாதை செய்துவிட்டதாக அவருடைய டுவிட்டர் பக்கத்திலேயே பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த கருத்துக்காக அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. கிரண்பேடி மன்னிப்பு கேட்பாரா? அல்லது இதுகுறித்து விளக்கமளிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.