ஆந்திராவை பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திரா பகுதியில் 6 லட்சம் அரசு ஊழியர்கள் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் போக்குவரத்து முடங்கியது. மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மின்சாரத்துறை ஊழியர்களும் போராட்டத்தில் குதித்தனர். அனல் மின்நிலைய ஊழியர்களின் போராட்டத்தால், 4 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டுள்ளது. இதனால் சீமாந்திரா பகுதியில் உள்ள 13 மாவட்டங்களில் தொடர்ந்து நான்காவது நாளாக மின்தடை நீடிக்கிறது. மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர். செல்போன் டவர்கள் செயல்படாததால், தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைகள் அனைத்தும் ஒத்திபோடப்பட்டுள்ளன.
விசாகப்பட்டினம், விஜயவாடா ஆகிய இடங்களில் உள்ள விமான நிலையங்கள் ஜெனரேட்டர் உதவியுடன் இயங்குகின்றன. விஜயநகரத்தில் போராட்டம் காரணமாக வன்முறை ஏற்பட்டதால் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர். கடந்த 2 நாட்களாக எந்த வன்முறையும் நடக்காததால், ஊரடங்கு நேற்று காலை 2 மணி நேரம் தளர்த்தப்பட்டது. மக்கள் கடைகளுக்கு சென்று அத்தியா வசிய உணவுப் பொருட்களை வாங்கினர்.
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு ஊழியர் சங்கத்தினருடன், ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி ஐதராபாத்தில் உள்ள தலைமை செயலகத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்தை தவிர்ப்பதற்காக போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும், ஆந்திர கடலோர பகுதியில் புயல் அபாயம் இருப்பதால், அரசு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் முதல்வர் வேண்டுகோள் விடுத்தார். இந்த பேச்சுவார்த்தை 3 மணி நேரம் நடந்தது. ஆந்திரா பிரிக்கப்படாது என்ற உறுதியான அறிவிப்பு வெளியிடும் வரை வேலை நிறுத்தத்தை கைவிடப்போவதில்லை என தொழிற் சங்கங்கள் உறுதியாக தெரிவித்தன.