புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக கிரண்பேடி நியமனம்
இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியான கிரண்பேடி, புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை இன்று அவர் பிறப்பித்தார்.
சமீபத்தில் டெல்லி மாநில தேர்தலில் பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்த கிரண்பேடிக்கு தற்போது துணை நிலை ஆளுநர் பதவி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க்கது.
துணை நிலை ஆளுநர் பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளது குறித்து கிரண்பேடி செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘எனது பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்ற தயாராக இருக்கிறேன். எனது வாழ்நாளின் ஒவ்வொரு நாளும் நாட்டின் நலனுக்காக செயல்பட தயாராக உள்ளேன்.
அரசு என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும், என்னை துணை நிலை ஆளுநராக நியமித்ததற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் மிசோரம், கோவா, சண்டிகர் ஆகிய இடங்களில் பணிபுரிந்திருக்கிறேன். ஆனால், அந்தமான் மற்றும் புதுச்சேரியில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்திருப்பது மிகவும் அற்புதமானது.
எனது ஆளுமை மற்றும் அனுபவத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.