அதிமுகவில் இணைகிறாரா கே.கே.எஸ்.எஸ்.ஆர் மகன்? ஸ்டாலின் ஆறுதல்
முன்னாள் அமைச்சரும் அருப்புக்கோட்டை தொகுதி திமுக எம்.எல்.ஏவுமான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் மகன் அதிமுகவில் இணையவுள்ளதாகவும், இதனால் அப்செட் ஆகியிருக்கும் அவருக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் இளைய மகன் ரமேஷ் தொழிலில் நஷ்டம் அடைந்ததால் சொத்தை பிரித்து கேட்டதாகவும் இதனால் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த கருத்துவேறுபாடை பயன்படுத்தி விருதுநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் மகன் ரமேஷூக்கு வலை விரித்ததாகவும், இந்த வலையில் சிக்கிய ரமேஷ் விரைவில் அதிமுகவில் இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக அப்செட் ஆகியிருக்கும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனிடம், ‘உங்கள் மகன் ரமேஷ் அதிமுகவுக்கு போனால் போகட்டும். சமாதானம் செய்கிறேன் என்று பேச்சுவார்த்தை நடத்தி அவரை பெரிய ஆளாக்க வேண்டாம். கவலைப்படாம இருங்க’ என்று மு.க.ஸ்டாலின் கூறியதாகவும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.