இந்தியத் தம்பதிகளில் ஏழு பேரில் ஒருவருக்கு மலட்டுத்தன்மை உள்ளது. மலட்டுத் தன்மை அதிகரித்துக் கொண்டிருப்பது உலகில் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
வாழ்க்கைமுறை மாற்றம், தாமதமான திருமணம், கருத்தரித்தலைத் தள்ளிப் போடுதல் , வாழ்க்கையும் வேலையும் தரும் நெருக்கடிகள், அளவுக்கு அதிகமான சூடு, பூச்சிக்கொல்லிகள், கதிர்வீச்சு அல்லது அளவுக்கு அதிகமான வேதிப்பொருட்கள், புகைபிடித்தல் அல்லது மது அருந்துதல் போன்றவை மலட்டுத்தன்மையை அதிகரிக்கின்றன.
பெண்கள் கருத்தரிப்பதைத் தள்ளிப்போடுவதால் முப்பதுகளின் பிற்பகுதியிலும் நாற்பதுகளின் ஆரம்பத்திலும் இயற்கைக் கருத்தரிப்பு கடினமாகிறது. இளம்பெண்களிடையே அதிகமாகிவரும் ஊளைச் சதையும் கருவுறுதலைத் தடுப்பதில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. உடல் உறவின் போது ஏற்படும் தொற்று நோய்களும் பெண்கள் ஐ.வி.எஃபை நாடக் காரணமாகின்றன.
ஐ.வி.எஃபுக்கு அடிப்படைகள்:
# கருத்தரிப்பில் வெற்றிக்கான வாய்ப்பு என்பது மலட்டுத்தன்மைக்கான காரணங்கள், வயது, வாழ்க்கைமுறை போன்ற பல காரணிகளைப் பொறுத்தது. செயற்கை கருத்தரிப்பு முறை மூலம் 30 வயதுக்கு உட்பட்டவர்கள், 50 சதவிகிதம் கருத்தரிக்க வாய்ப்பு உள்ளது.
# பெண்களின் கருத்தரிப்பு 35 வயதிலிருந்து பெருமளவு குறைகிறது. கருமுட்டைகளின் அடர்த்தி குறைவது, முட்டையின் தரம் குறைவதும் இதற்கு முக்கியக் காரணங்கள். சினைமுட்டைகளின் தரமும் 35 வயதுக்கு மேல் குறைய வாய்ப்புள்ளது. யு.ஆர். எனப்படும் எளிய ரத்தப் பரிசோதனை மூலம் ஒரு பெண்ணின் உடலில், வயதுக்குத் தகுந்த எண்ணிக்கையிலும், வீரியமாகவும் முட்டைகள் உள்ளனவா என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
# ஆண்களுடைய விந்துத்திறனும் வயதுக்கு ஏற்றவாறு மாறுபடுகிறது. வயதுக்கு ஏற்ப அவர்களுடைய விந்து ஜீன்களின் தரம் குறைந்து போகிறது. கருத்தரிப்பு குறைவுக்கு ஆண்களின் மலட்டுத்தன்மையும் முக்கியக் காரணம். விந்துக்களில் டி.என்.ஏ. சிதைவு, குறைபாடுள்ள உருவம், எண்ணிக்கையும் அசைவும் குறைதல் போன்றவை இதற்குக் காரணங்கள். 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களிடம் இக்குறைபாடு சாதாரணமாகக் காணப்படுகிறது.
# இவற்றால் உடல் ரீதியாகத் தலைவலி, சோர்வு, உடல் பருத்தல், மனநிலை (மூடு) மாற்றங்கள் போன்றவை ஏற்படுகின்றன. ஐ.வி.எஃபின் விளைவை எதிர்பார்த்து அதிகப் பதற்றம் அடைவதால் அதிக மன உளைச்சல் ஏற்படலாம்.
# ஐ.வி.எஃபில் இரண்டு வகையான சிகிச்சைச் சுழற்சிகள் உள்ளன. முதலாவது சைக்கிள் ஆன்டாகோனிஸ்டிக் சைக்கிள் (எதிர்மறை சுழற்சி) எனப்படுகிறது. இதில் ஒரு பெண்மணியின் மாதவிடாயின் முதல் நாளிலிருந்து சிகிச்சை தொடங்குகிறது. அல்லது பரவலாகச் செய்யப்படும் ஆன்டாகோனிஸ்டிக் சைக்கிளில் பெண்ணின் மாதவிடாயின் 22-ம் நாளில் தொடங்கி ஹார்மோன் கட்டுப்பாடு முறையில் இது நடைபெறும். இது ஐந்து வார சிகிச்சை. கருவுற்றிருப்பதை உறுதி செய்வதற்காக, கருவைக் கருப்பைக்கு மாற்றிய பின்னர் இரண்டு வாரங்கள் காத்திருக்க வேண்டும்.
# இதில் காணப்படக்கூடிய முக்கிய மருத்துவச் சிக்கல், ஒரு சதவீதம் பெண்களிடம் உள்ள ஓவுலேஷன் ஹைப்பர் ஸ்டிமுலேஷன் சிண்ட்ரோம் அல்லது OHSS. ஒரு பெண்ணின் உடல் ஹார்மோன் சிகிச்சையை ஏற்றுக்கொண்டு, கருமுட்டைகளை அதிகமாக உற்பத்தி செய்யும்போது இது ஏற்படுகிறது.
# கருத்தரிக்க இயலாமைக்கு மாற்றாகப் பலனளிக்கக் கூடிய ஒரு சிகிச்சை ஐ.வி.எஃப். ஆனாலும் இதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. இல்லற வாழ்க்கையில் நம்பிக்கை இழந்த ஆயிரக்கணக்கானவர்களுக்குக் கவுன்சலிங் உதவி புரிந்துள்ளது. அதைப் போலவே இந்த சிகிச்சையை நிறுத்திவிடலாமா என்னும் பிரச்சினையை எதிர்கொள்ளும் தம்பதிகளுக்கும் கவுன்சலிங் வழங்கப்படுகிறது.