கோச்சடையான் படத்தின் திருட்டு விசிடிக்கள் சேலத்தில் பிடிபட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் திரைப்படம் நேற்று தமிழகம் உள்பட உலகம்\ முழுவதும் ரிலீஸ் ஆனது. படம் வெளியாகி 24மணி நேரமே ஆன நிலையில் கோச்சடையான் திரைப்படத்தின் திருட்டு வீடியோ கேசட் வெளிவந்ததாக பரவலாக தகவல் வந்தது.
இந்நிலையில் சேலத்தில் உள்ள வீரபாண்டியார் நகர் ஆலமரக்காடு பகுதியில் உள்ள மர்ம பார்சலின் மீது சந்தேகம் கொண்ட அந்த பகுதி ரஜினி ரசிகர்கள் போலீஸுக்கு தகவல் கொடுத்தனர்.
போலீஸார் முன்னிலையில் அந்த பார்சலை பிரித்துபார்த்தபோது அதில் கோச்சடையன் திரைப்படத்தின் 500 திருட்டி டிவிடிக்கள் இருப்பது தெரிய வந்தது.
அந்த கடையில் பணிபுரிந்த இரண்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். கடை உரிமையாளர் தலைமறைவானார். பின்னர் போலீஸார் கடைக்கு சீல் வைத்தனர்.
இதுகுறித்து சேலம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தலைவர் பழனிவேல் அவர்கள் கூறியதாவது: மிக பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் தலைவர் ரஜினியின் கோச்சடையான் படம் வெளியான 24 மணி நேரத்தில் சேலம் மாவட்டம் முழுவதும் திருட்டு டி.வி.டிக்கள் விற்பனை செய்யப்படுவதாக பல இடங்களில் ரசிகர்களிடம் இருந்து எனக்கு தகவல் கிடைத்தது. அதுவும் மோட்டார் சைக்கிள்களில் கொண்டு வரப்பட்டு கடைகளில் பதுக்கப்படுவதாகவும் கூறினர்.
இதையடுத்து நான் காலை 6 மணிக்கே இந்த பகுதியில் வந்து ஒரு கேசட் கடையை கண்காணித்து கொண்டு இருந்தேன். அப்போது மோட்டார் சைக்கிளில் பண்டல்கள் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் சென்று பார்த்த போது கோச்சடையான் திருட்டு கேசட் இருப்பது தெரியவந்தது. எனவே அதை பிடித்து போலீசில் ஒப்படைத்து உள்ளோம்.
இந்த சம்பவத்தில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்றும், இந்த கேசட்டுகள் எங்கிருந்து வந்தது என்றும் போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.