மூன்று வருடங்கள் கழித்து வரும் ரஜினி படம், இந்தியாவின் முதல் கேப்ட்சன் மோஷன் டெக்னாலஜியில் வந்த படம், தீபிகா படுகோனே நடித்த முதல் தமிழ் படம் மற்றும் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த படம் என பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ள படம் கோச்சடையான்.
திரையுலகினரும், ஊடகங்களும் பயமுறுத்திய அளவுக்கு படம் மோசம் இல்லை. முதல் அரைமணி நேரத்திற்கு இது ரஜினியா அல்லது பொம்மையா என்று ரசிகர்கள் சற்று குழம்புவது என்னவோ உண்மைதான். ஆனால் அரைமணி நேரத்திற்கு பிறகு ஆரம்பிக்கும் விறுவிறுப்பு பிரமிக்க வைக்கின்றது.
கே.எஸ்.ரவிகுமாரின் வலுவான திரைக்கதை படத்தை தூக்கி நிறுத்துகிறது. வலுவான கதை, விறுவிறுப்பான திரைக்கதை, ஆகியவை டெக்னாலஜியின் தெரியும் சிறுசிறு குறைகளை எல்லாம் நிவர்த்தி செய்துவிடுகிறது என்பதுதான் உண்மை. இந்த படம் அனிமேஷனா? அல்லது மோசன் கேப்சரிங் டெக்னாலஜியா? என்ற ஆராய்ச்சியை படம் பார்க்க தொடங்கிய அரைமணி நேரத்தில் மறந்துபோய் கதையில் லயித்துபோய்விடுகிறோம் என்பதுதான் உண்மை.
படத்தின் விறுவிறுப்புக்கு இன்னொரு முக்கிய காரணம் ஏ.ஆர்.ரஹ்மான். ஒவ்வொரு பொம்மைக்காட்சிக்கும் உயிர் கொடுப்பது அவரது பின்னணி இசைதான். டிரைலரும் டீசரும் ரொம்ப சுமாராக இருந்ததால் மனம் நொந்துபோன ரஜினி ரசிகர்கள் கண்டிப்பாக தியேட்டரில் படம் பார்த்தால் முழு அளவில் திருப்தி அடைவார்கள். அதிலும் 3Dயில் பார்த்தால் அந்த அனுபவமே தனி.
ரஜினியை தவிர மற்ற நடிகர் நடிகைகளின் மோசன் கேப்சரிங் டெக்னாலஜிக்கு இயக்குனர் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது படம் பார்க்கும்போதே தெரிகிறது. அதிலும் தீபிகா படுகோனேவை பார்க்கும்போது உண்மையில் இது வேற ஏதோ ஒரு மொக்கை நடிகை என்றுதான் எண்ண தோன்றுகிறது.
அவதார் மற்றும் டின்டின் படங்களோடு கோச்சடையானை ஒப்பிடக்கூடாது. ஆனால் இந்தியாவில் இது ஒரு புதிய முயற்சி என்றுதான் சொல்லவேண்டும். மோசன் கேப்ட்சரிங் டெக்னாலஜியில் இது ஒரு தொடக்கமே. எதிர்காலத்தில் இந்த டெக்னாலஜியை இன்னும் நன்றாக நம் இந்திய இயக்குனர்களும் பின்பற்றலாம்.
கோச்சடையான், கோட்டைப்படனம் என்ற நாட்டின் படைத்தளபதி. தனது படைவீரர்களை காப்பதற்காக எடுக்கும் ஒரு முடிவு காரணமாக தேசத்துரோகம் குற்றம் சுமத்தப்பட்டு கொலையும் செய்யப்படுகிறார். தந்தையின் களங்கத்தை போக்க போராடும் தனயன் ராணாவின் கதைதான் கோச்சடையான்.
கோச்சடையான் மகன் ராணா கோட்டயப்பட்டினம் நாட்டில் இருந்து, எதிரி நாடான கலிங்கபுரிக்கு வருகிறான் அங்கே தனது தாய்மாமா மாமா நாகேஷ், கோச்சடையானின் தங்கையை வளர்த்து வருகிறார். அவருடன் சேர்ந்து ராணாவும் வளர்ந்து வருகிறார். இந்நிலையில் கோச்சடையானின் அண்ணன் சிறுவயதிலேயே காணாமல் போய் விட்டதாகச் சொல்கிறார் நாகேஷ். ராணாவின் தங்கையை இளவரசர் சரத்குமார் காதலிக்க, இளவரசி தீபிகா படுகோனே ராணாவை காதலிக்கிறார். இந்த பண்டமாற்று முறை அரசர் நாசரை கடுப்பேற்றிவிடுகிறது. கூடவே ராணாவின் பழி வாங்கும் கதையும் சேர்ந்துகொள்ள, படம் அதன்பின் ஜெட் வேகத்தில் செல்கிறது.
படத்தின் திரைக்கதையில் கொஞ்சம்கூட விறுவிறுப்பு குறையவில்லை. ஜெட் வேகத்தில் செல்லும் கதையில் ராணாவுக்கு நாசருக்கு இடையே நடக்கும் போராட்டம்தான் மீதிக்கதை.கடைசியில் காணாமல் போன ராணாவின் சகோதரனும் வருகிறார். தொடரும் என்று போட்டு முடிப்பதால் அடுத்த பாகமும் வருவதற்கு வாய்ப்புள்ளது.
குழந்தைகளோடு சென்று தைரியமாக பார்க்கலாம்.